அதிமுகவை ஓரங்கட்டிய விஜய்? “4 சுவர்களை விட்டு வெளியே வாங்க”.. முன்னாள் அமைச்சர் பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் மக்களை சந்திக்காமல் 4 சுவர்களுக்குள்ளேயே 2 ஆண்டு கால அரசியலை முடித்துவிட்டார் என அதிமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, தவெக இடையேதான் போட்டி என தவெக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, விஜய் இன்னும் மக்களையே சந்திக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பதில் அளித்துள்ளார்.

Vijay tvk aiadmk

அமித் ஷா- எடப்பாடி சந்திப்பு

கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் முனுசாமி, "டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுகவினர் சந்தித்தது கூட்டணிக்காக என்பது உண்மையான தகவல் இல்லை. டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத்தை பார்வையிடுவதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றார்.

தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழகத்தின் நலனுக்காகவும் பல்வேறு நல திட்டங்களை, பெறுவதற்காகவும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். மேலும் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியை விடுவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம். இதில் அரசியல் இல்லை.

எங்கள் எதிரி திமுக

அதிமுகவை பொறுத்தவரை 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த கட்சி. அதிமுக எப்போதும் ஒரே பார்வையில் சென்று கொண்டிருக்கிறது, எங்களுடைய ஒரே எதிரி திமுக தான். திமுகவை எதிர்த்து களம் ஆட யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுடன் யார் இணக்கமாக ஒன்றிணைந்து செயல்பட்டாலும் செயல்பட தயாராக உள்ளோம்.

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவதும், ஒரு தொண்டனாக இருந்து கூட பணியாற்றுவேன், கட்சியின் நலனே முக்கியம் என அண்ணாமலை பேசுவதும் அவரவர்கள் கருத்து. இது குறித்து அவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

தவெக - திமுக போட்டி?

அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழில்முனைவோர் மாநாடு நடத்தப்பட்டதன் விளைவாக டெல்டா, ஓலா, டாட்டா எலக்ட்ரானிக்ஸ், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோன்றின. திமுக ஆட்சிக்கு வந்த நான்காண்டு காலங்களில் அது போல ஏதாவது ஒரு நிறுவனம் வந்ததா?

2026 தேர்தலில் திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகத்துக்கும் இடையே தான் போட்டி என விஜய், அவருடைய கருத்தை சரியாக தான் கூறியுள்ளார். அவர் படங்களை கூட வெளியிட முடியாமல் திமுக ஆட்சியில் சிரமம் கொடுத்தனர். அவரின் படத்தை விநியோகம் செய்ய குறிப்பிட்ட நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக விஜயின் மனம் புண்பட்டு உள்ளது.

4 சுவர்களுக்குள்ளேயே விஜய் அரசியல்

செய்யும் தொழிலுக்கு இவ்வளவு இடையூறு கொடுக்கிறார்கள் என்று மனம் வெதும்பிய காரணத்தினால் மேடையில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். விஜய்யின் சிந்தனை அரசியல் வெளிப்பாடு அல்ல, நீண்ட காலமாக மனதில் இருக்கும் வருத்தத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். அதன் வெளிப்பாடாகத் தான் திமுகவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே போட்டி எனத் தெரிவித்துள்ளார். அதிலிருந்து வெளியில் வந்து அரசியல் ரீதியாக அவர் பேச வேண்டும்.

ஆதவ் அர்ஜுனா எங்கு சென்றாலும் தன்னை முன்னிலைப்படுத்தி பேசுகிறார். அவரை அடையாளம் கண்ட விசிக தலைவர் திருமாவளவன் அவரை ஒதுக்கி வைத்தார். சினிமா அனுபவம் மிகுந்தவர் விஜய். இன்னும் மக்களையே அவர் சந்திக்கவில்லை. அவர் 4 சுவர்களுக்குள்ளேயே 2 ஆண்டுகால அரசியலை முடித்துவிட்டார். அவர் மக்களை சந்தித்து அரசியல் செய்யும் பட்சத்தில் அரசியலை புரிந்து கொண்டு அவரும் அதற்கு ஏற்றார்போல் நடந்து கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

விஜய் பேசியது

முன்னதாக நேற்று நடைபெற்ற தவெக பொதுக்குழுவில் பேசிய விஜய், "மன்னராட்சியின் முதல்வரே, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் மட்டும் போதாது. செயலிலும் ஆட்சியிலும் அதைக் காட்ட வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சிக்கு கொஞ்சமும் குறைவில்லாத பாசிச ஆட்சிதான் திமுகவின் ஆட்சியும். என் தொண்டர்களையும் என் மக்களையும் பார்ப்பதற்கு தடை போடுவதற்கு நீங்கள் யார், சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதால் அமைதியாக இருக்கிறேன்.

முதல்வரே, உங்க ஆட்சியை பற்றி கேள்வி கேட்டால் எதற்கு இவ்வளவு கோவம் வருகிறது. உங்க ஆட்சியில் படிக்கும் பெண் குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை பற்றிச் சொல்ல முடியவில்லை. இதில் உங்களை அப்பா என்று அழைக்கிறார்களாம். இதே தமிழக பெண்கள்தான் உங்க அரசியலுக்கும், ஆட்சிக்கும் முடிவு கட்டப் போகிறார்கள். அடுத்த ஆண்டில் தமிழகம் இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். தவெகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி. அதில் தவெகவுக்கு வெற்றி நிச்சயம்." எனப் பேசி இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+