“பாராட்டாம இருக்க முடியுமா?” ஸ்டாலினின் மாஸ் மூவ்.. புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்!
சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி.செழியன் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும், கோவி செழியனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, திமுக அரசையும் பாராட்டி உள்ளார்.
திருவிடைமருதூர் (தனி) தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற கோவி.செழியனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என திமுக ஆட்சிக்கு வந்ததுமே பேசப்பட்டது. ஆனால் டெல்டாவில் பலரும் அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுத்ததால் முதல்வர் ஸ்டாலின் டெல்டாவை சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. அதேசமயம், கோவி.செழியனுக்கு அரசு தலைமை கொறடாவாக பொறுப்பு வழங்கி இருந்தார் ஸ்டாலின்.

இந்நிலையில் நேற்று நடந்த அமைச்சரவை மாற்றத்தில் கோவி.செழியனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படட்து. உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி செழியன் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த ஐம்பதாண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தலித் ஒருவர் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியுள்ளார்.
சென்னை சட்டக் கல்லூரியில் படித்த போது மாணவர் அணியில் மாவட்ட துணை அமைப்பாளராக இருந்தார் செழியன். தலைமை கழக பேச்சாளராக தமிழகம் முழுவதும் திமுக மேடைகளில் முழங்கி உள்ளார் கோவி. செழியன். 2011ல் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பைப் பெற்ற கோவி செழியன், அந்த தேர்தலில் திமுகவின் முக்கிய தலைவர்கள் பலரே தோற்ற போதும் வென்று காட்டினார். தொடர்ந்து, 2016, 2021 தேர்தல்களிலும் சீட் பெற்று 3வது முறையாக எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார் கோவி.செழியன்.
உயர்கல்வித்துறை அமைச்சராக டாக்டர் கோவி. செழியன் சேர்க்கப்பட்டிருப்பது அமைச்சரவை மாற்றத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் இப்போது மொத்தம் நான்கு தலித் அமைச்சர்கள் உள்ளனர். இது ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத்தில் பரந்த பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதாக உள்ளது.
கோவி.செழியன், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்று உள்ளதற்கு திமுக தலைவர்கள், கூட்டணி கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும், கோவி.செழியன் அமைச்சராகி உள்ளதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நானும் கோவி. செழியன் அவர்களும் ஒரே நாளில் 'முனைவர்' பட்டம் பெற்றோம். எளியவன் நான் பள்ளிக்கல்வி அமைச்சராகப் பணியாற்றினேன். இப்போது அவர் உயர்கல்வி அமைச்சராகி இருக்கிறார். எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..! பட்டியலினத்தவருக்கு உயர்கல்வி அமைச்சர் பதவி. பாராட்டாமல் இருக்க முடியுமா..?" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications