தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமா!
சென்னை: அதிமுக முன்னாள் எம்.பியும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளருமான சத்தியபாமா இன்று தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்புகளில் இருந்து வந்தவர் சத்தியபாமா.
அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பதவிகளையும் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பறித்தார்.

அந்த வரிசையில், செங்கோட்டையன் ஆதரவாளரான அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமா, தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்து இருந்தார். உடனே செங்கோட்டையன் ஆதரவாளரான சத்யபாமாவின் பதவியும் பறிக்கப்பட்டது.
2001ல் கோபிச்செட்டியாளையம் நகர் மன்ற உறுப்பினராகச் செயல்பட்டார் சத்தியபாமா. நகர்மன்றத் துணை தலைவர் பதவியும் வகித்தார், பின் 2007-ல் மாவட்ட மகளிர் அணியினுடைய செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வழங்கினார் ஜெயலலிதா. 2011ல் ஒன்றிய குழு உறுப்பினராகவும், கோபி ஒன்றிய சேர்மனாகவும் செயல்பட்டார்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் திருப்பூர் மக்களவை தொகுதியில் நிற்க ஜெயலலிதா சத்யபாமாவிற்கு சீட் கொடுத்தார். அப்போது 1.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் சத்தியபாமா. அதிமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்புகளையும் வகித்து வந்தார் சத்தியபாமா.
இந்நிலையில் தான் அவர், இன்று செங்கோட்டையன் தலைமையில், விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்துள்ளார். அவருடன், செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோரும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications