அதிமுக யாருக்கும் அடிமையில்லை.. 2026ல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.. எடப்பாடி பழனிசாமி!
சென்னை: 2026ல் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வேறு மாதிரி வாக்களித்துள்ளதாக கூறிய அவர், மகளிர் உரிமைத் தொகை விரைவாக கொடுக்க அதிமுகவின் அழுத்தமே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிமுக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதையடுத்து அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலக் குறைவால் பங்கேற்காததால், தற்காலிக அவைத் தலைவராக கேபி முனுசாமி நியமனம் செய்யப்பட்டார்.

இதையடுத்து இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, பின்னர் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அமைதி, வளம், வளர்ச்சியே அதிமுகவின் தாரக மந்திரம். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுகவின் பயணம் தொடரும். எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருக்கும் வாரிசுகள் கிடையாது. அவர்கள் இருவரும் மக்களையே வாரிசாக பார்த்தனர்.
2026ல் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும். அதற்கு அத்தனை பேரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் நினைத்தால் நிச்சயம் நடக்கும். இதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. 2011ல் திமுகவால் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியவில்லை. அதேபோல் 2014 லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.
2016ல் தனியாக போட்டியிட்டு அதிமுக ஆட்சியை கைப்பற்றியது. இதனையெல்லாம் மறந்துவிட்டு ஸ்டாலின் பேசி வருகிறார். கீழே சுற்றும் சக்கரம் நிச்சயம் மீண்டும் வரும். காலம் மாறும்.. மக்கள் சட்டசபைத் தேர்தலில் ஒரு மாதிரியும், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மாதிரியும் வாக்களிப்பார்கள். 2019ல் நாடாளுமன்றத் தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே அதிமுக கூட்டணி வென்றது.
ஆனால் சட்டசபைத் தேர்தலில் 75 தொகுதிகளில் அதிமுக வென்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக முழுமையாக வென்றது. தற்போது அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த இரு கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 49 சதவிகிதம் பெற்றுள்ளது. இதனால் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும். திமுக தலைவர்கள் நம்மை வாக்களிப்பது கேலிக்கூத்து.
அதிமுகவின் அழுத்தம் காரணமாகவே மகளிர் உதவித் தொகை வழங்கப்பட்டது. தேர்தலுக்காக இன்னும் 30 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இந்த பணத்தை மக்கள் பெற்றுக் கொண்டாலும், வாக்கை அதிமுகவுக்கே போடுவார்கள். முதல்வர் ஸ்டாலின் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டார். அதிமுக ஆட்சியில் 52 லட்சம் லேப்டாப் வழங்கப்பட்டது.
தற்போது மீண்டும் லேப்டாப் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அது தேர்தலுக்காக தான். திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. இதனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்க உள்ளனர். அதேபோல் திமுக ஆட்சியில் காவிரி படுகை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளை பார்க்க உதயநிதி ஸ்டாலின் அச்சத்தில் இருக்கிறார். மின்கட்டணம் சுமார் 52% உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications