வரப்போகும் அமித்ஷா.. பாஜக வைத்த டிமாண்ட்! ஒபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக நாளை முக்கிய மீட்டிங்!
சென்னை: சட்டசபை தேர்தலில் பாஜக இந்த முறை 50 இடங்களை அதிமுகவிடம் கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் 21ம் தேதி சென்னை வரும் அமித் ஷா, அதிமுகவிடம் அதிக சீட் கேட்டு நெருக்கடி கொடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் ஒபிஎஸ் இபிஎஸ் தலைமையில் நாளை அதிமுக அவசர ஆலோசனை நடத்த உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, மாநிலத்தில் கட்சியை வளர்க்க வேல் யாத்திரை, பிரபலங்களை கட்சியில் சேர்ப்பது உள்ளிட்டபல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற தீவிரமாக வேலை செய்து வருகிறது.
அத்துடன் பாஜக தலைவர்கள், தாங்கள் இல்லாமல் தமிழகத்தில் எந்த கட்சியும் ஆட்சியமைக்க இயலாது என்றும், பாஜக தலைமையிலான கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.

அதிக சீட் கேட்கும் பாமக
பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆகியோர் தேர்தல் நேரத்தில் அதிமுகவிடம் அதிக இடங்களை கேட்டு நெருக்கடி அளிக்கக்கூடும் என தெரிகிறது. தேமுதிக தனித்து போட்டியிடவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் உறுதியாக தகவல்கள் இல்லை. தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பதை அடுத்த மாதம் அல்லது ஜனவரியில் பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்ய உள்ளதாம்.

அரசு திட்டங்கள்
இந்த சூழலில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா வரும் 21ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் அன்று மாலை 4.30 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் ரூ.380 கோடியிலான புதிய நீர்த்தேக்க திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.. அத்துடன் ரூ.61843 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

50 தொகுதிகள் கட்டாயம்
அமித் ஷா, தமிழக அரசின் திட்டங்களை தொடங்கி வைக்க வருகிறார் என்றாலும், சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்று தமிழகத்தில் பாஜகவை வளர்க்க வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளார. 60 தொகுதிகளில் போட்டியிட பாஜக விரும்புகிறது. குறைந்தபட்சம் 50 தொகுதிகள் கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக கூறப்டுகிறது. இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை அமித் ஷா சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பொறுத்திருந்து பாருங்கள்
தமிழக பாஜக தலைவர் முருகன் அமித்ஷாவின் வருகை குறித்து பேசுகையில், அமித்ஷாவின் வருகைஆளும் கட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று அண்மையில் கூறினார். எனவே என்ன மாதிரியான மாற்றங்கள் வரும் என்பது விரைவில் தெரிந்துவிடும். இந்த சூழலில் அமித்ஷா வருகைக்கு முதல் நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நாளை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.

நாளை மீட்டிங்
இதில் மண்டல பொறுப்பாளர்கள்,அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள். அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமித் ஷா வருகைக்கு முதல் நாள் அதிமுக ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications