பாஜக டேபிளில் லிஸ்ட்..ஓபிஎஸ் உடன் நெருக்கம் காட்டும் மாஜிக்கள்! யோசித்த எடப்பாடி..இனி எல்லாம் மாறுது
சென்னை: இன்னும் சில மாதங்களில் அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறலாம் என கூறுகின்றனர். குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்திற்காக பாஜக நேரடியாகவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் பேசியதாம். முதலில் பிடிவாதமாக மறுத்த அவர் தற்போது பிறகு பார்க்கலாம் என கூறி இருக்கிறார். சில மூத்த முன்னாள் அமைச்சர்கள் ஓபிஎஸ் உடன் தொடர்பில் இருப்பதை பாஜக தரப்பு எடுத்துச் சொல்லி அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது. விரைவில் நல்ல செய்தி வரும் என்கின்றனர்.
தமிழக அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடைந்த அதிமுக பாஜக கூட்டணி தற்போது மீண்டும் ஒட்ட வைக்கப்பட்டிருக்கிறது. அதிமுக தலைமையில் தான் கூட்டணி எனக் கூறியிருந்தாலும் பாஜக மறைமுகமாகவே ஆதிக்கம் செலுத்துகிறது என்கின்றனர்.
கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அதிமுக தலைவர்களை பிற தலைவர்கள் சந்தித்த காலம் போய் தற்போது அதிமுக தலைவர்கள் கூட்டணி கட்சித் தலைவர்களை தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. கடந்த தேர்தல்களில் தேமுதிக, பாமக, பாஜக தலைவர்களை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தேடித் தேடி போய் பார்த்தது தனிக்கதை.

இந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளர் என சொல்லப்பட்டாலும் தேர்தலுக்குப் பிறகு எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என கூறியுள்ளதாம். அதே நேரத்தில் தேர்தலுக்கு முன்னதாக கூட்டணியை வலுவாக்க வேண்டும் என்ற திட்டத்தை பாஜக முன் வைத்துள்ளது. இதற்காக பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை கூட்டணியில் இருப்பதை உறுதி செய்வது, ரஜினிகாந்தின் ஆதரவை பெறுவது உள்ளிட்ட சில திட்டங்கள் இருக்கிறது.
குறிப்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சிக்குள் மீண்டும் சேர்ப்பது, டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நான் தான் முதல்வர் வேட்பாளர் என எடப்பாடி பழனிச்சாமி சொன்னதையும், அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் பாஜக ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில் ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என பாஜக தரப்பு வற்புறுத்தி இருக்கிறது.
முதலில் அதற்கு எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லை. அதற்குப் பிறகு தென் மாவட்டங்களின் மூன்று முக்கிய முன்னாள் அமைச்சர்களும் வட மாவட்டத்தின் இரண்டு முன்னாள் அமைச்சர்களும் பன்னீர்செல்வத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதை சுட்டிக் காட்டிய பாஜக தேர்தலுக்கு முன்னால் மேலும் சில விவகாரங்கள் வரலாம், இரட்டை இலை முடங்கும் நிலை கூட ஏற்படலாம். எனவே ஓ.பன்னீர்செல்வத்தை நிச்சயம் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இவ்வளவு நாள் ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வத்துடன் தொடர்பில் இருப்பதை எடப்பாடி எதிர்பார்க்கவில்லை எனச் சொல்கின்றனர். மேலும் ரஜினிகாந்த் ஓ.பன்னீர் செல்வத்துடன் நல்ல இணக்கத்தில் இருக்கும் நிலையில் அவரது ஆதரவை பெறவும் அதிமுகவுக்குள் ஓபிஎஸ் வர வேண்டியது அவசியம் என கூறி இருக்கிறது. இதை அடுத்து பிடிவாத மனநிலையில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது கூட்டணிக்கு வேண்டுமானாலும் வர வைக்கலாம். ஆனால் கட்சிக்குள் வரக்கூடாது என கூறியிருக்கிறாராம். இன்னும் சில நாட்களில் கட்சிக்குள் சேர்க்கும் முடிவுக்கு கூட எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக் கொள்வார் என்கின்றனர் ஓபிஎஸ்-க்கு நெருக்கமான ஒரு நபர்.












Click it and Unblock the Notifications