"தமிழகத்தில் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுகதான்.." பாஜகவின் ஆட்சி மீண்டும் அமையும்.. அண்ணாமலை
சென்னை: தமிழகத்தில் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுகதான் என்றும் திமுகவுக்கு எதிரான மக்களின் மனநிலையை பாரதிய ஜனதா வாக்குகளாக மாற்றுவதே சவால் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் கே அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரதிய ஜனதாவில் எந்த ஒரு முக்கிய முடிவு என்றாலும் மாநில தலைமையை கலந்து ஆலோசித்துதான் தேசிய தலைமை முடிவு எடுக்கும். அந்த அடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட அக்கட்சி நிர்வாகிகள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வந்த போது என்னையும் உடன் இருக்க வேண்டும் என்று தொலைபேசி வாயிலாக அழைத்தார்கள்.
அப்போது அனைவருமே கலந்து பேசினோம். 2024 பாராளுமன்ற தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான தேர்தல். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40- தொகுதிகளையும் கைப்பற்றுவோம். நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. கட்சி, தலைவர்களை கடந்து ஊழலுக்கு எதிராக பாரதிய ஜனதா உள்ளது. 400 எம்பிக்களை பெற்று மத்தியில் பாஜகவின் ஆட்சி மீண்டும் அமையும்.
தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான பாரதிய ஜனதாவின் போராட்டம் தொடங்கிவிட்டது. திமுகவுக்கு எதிரான மக்களின் மனநிலையை பாரதிய ஜனதா வாக்குகளாக மாற்றுவதே சவால். யார் ஊழல் செய்தாலும், அதுகுறித்து தகவல், ஆதாரங்களை வெளியிடுவோம். எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எனது சுற்றுப்பயணத்தில் இதை நீங்கள் பார்ப்பீர்கள்.

ஊழலுக்கு எதிராக பாஜக போராடும். கட்சியின் தலைவரோ பெயர்களோ தேவையில்லை. ஊழலுக்கு எதிராக பாஜக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதில் பாஜகவிற்கும் கவுரமாக இடம் கொடுக்க வேண்டும் என்பதுதான் தொடர்ந்து இருக்கக்கூடிய பேச்சு. தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக. இதற்குள் நிறைய கட்சிகள் உள்ளன.
தேர்தலுக்கு இன்னும் 9 மாதம் இருக்கு. ஏற்கனவே சொல்லியதை போல தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கான நேரம் இதுவல்ல..அதற்கான காலம் வரும். அறைக்குள் பேசியதை வெளியில் சொல்வது நன்றாக இருக்காது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியில் இருக்கும் எனக்கான பாதையை அமித்ஷா, மற்றும் ஜேபி நட்டா ஆகியோர் ஏற்கனவே வகுத்து தந்துவிட்டார்கள். அவர்கள் கொடுத்த அறிவுரைகளை ஏற்பது தான் எனது வேலை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications