தமிழ்நாடு முழுக்க பறக்கும் அதிமுக டீம்.. தேர்தல் அறிக்கை தயாரிக்க ஏற்பாடு.. ஆர்டர் போட்ட எடப்பாடி!
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், வரும் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள மக்களை சந்தித்து, பல்வேறு தரவுகளை பெற்று தேர்தல் அறிக்கையை தயார் செய்ய உள்ளனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி மற்றும் பென்ஜமின் ஆகிய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் உத்தரவிட்டார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்பி உதயகுமார், வைகைச்செல்வன் ஆகிய 10 பேரை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவாக அமைத்தது அதிமுக. இக்குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "18-வது பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுகவின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.
எந்தவொரு தேர்தல் என்றாலும், மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, எதிர்கால நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை உள்ளடக்கியதாக கழகத்தின் தேர்தல் அறிக்கைகள் இருந்திருக்கின்றன. அதுபோன்றே, சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள சமூக அரசியல், பொருளாதார மாற்றங்களை கணக்கில் எடுத்து, தமிழ்நாட்டின் நலனை முன்னிலைப்படுத்துவதும், இந்திய சமூக அரசியல் முன்னேற்றத்திற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குவதுமான ஒரு தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பொருட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் வருகிற 5-ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை, கீழ்க்கண்ட 9 மண்டலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து தரவுகளை சேகரித்து, ஆகச் சிறந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.
மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசித்து, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு வருகை தந்து பொதுமக்களின் கருத்துகளைப் பெறும் வகையில், அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திட வேண்டும் என்றும், கூட்டம் நடைபெறுவதற்கான மண்டபத்தை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர் முன்பதிவு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
அதன்படி, 5ஆம் தேதி சென்னை, வேலூர், 6ஆம் தேதி விழுப்புரம், சேலம், 7ஆம் தேதி தஞ்சை, திருச்சி, 18ஆம் தேதி கோவை, மதுரை, 10ஆம் தேதி நெல்லை மண்டலங்களில் கருத்து கேட்கப்படும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications