20+1 சீட்.. அன்புமணியுடன் டீலை முடித்த எடப்பாடி பழனிசாமி! உறுதியான அதிமுக - பாமக கூட்டணி! அப்போ ஐயா?
சென்னை: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது பாமக - அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பாமகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அதிமுக - பாமக கூட்டணி குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணிகளை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தமிழக தேர்தல் வரலாற்றி அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சியை இழந்ததில்லை என்ற சாதனையை தக்க வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலை மிகுந்த முக்கியத்துவத்துடன் எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
அதற்காக மக்களவைத் தேர்தலில் நல்ல வாக்கு வித்தியாசம் பெற்ற பாஜகவுடன் அவர் மீண்டும் கூட்டணி அமைத்தார். ஆனால் அதிமுக கூட்டணியின் வலிமையை அதிகரிக்க பாமக, தேமுதிக போன்ற கட்சிகளின் ஆதரவும் அவசியம் என்பதால் அந்த நோக்கிலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்தன. இதற்கிடையில் பாமக கட்சிக்குள் தந்தை-மகன் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, யாருடன் கூட்டணி குறித்து பேச வேண்டும் என்ற சிக்கலும் அதிமுகவுக்கு ஏற்பட்டது. பின்னர் தேர்தல் ஆணையம் அன்புமணி தரப்பை அங்கீகரித்ததும் நிலைமை தெளிவானது.
பாமக சீட் டீல்
இதன்பின் அதிமுகவும் பாமகவும் இடையே பேச்சுவார்த்தைகள் வேகமடைந்தன. இந்த நிலையில் தான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் போது தான் கூட்டணி குறித்து இறுதி முடிவும் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக - பாமக கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக, பாமகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதோடு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்க எடப்பாடி பழனிசாமி சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக பாமக கூட்டணி
வட மற்றும் மேற்கு மாவட்டங்களில் பாமக வாக்கு வங்கி வலுவாக இருப்பதால், அந்த வாக்குகளை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் இணைந்து வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருக்கிறார் என்ற கணிப்பும் அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது. மறுபுறம், இந்த கூட்டணி திமுகக்கு எவ்வாறு சவாலாக மாறும் என்பது அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அன்புமணி - ராமதாஸ்
ஆரம்பத்தில் இருந்து திமுக எதிர்ப்பில் அன்புமணி ராமதாஸ் உறுதியாக இருந்தார். தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்ட போதும் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தார். இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது 100 சதவீதம் உறுதியாக இருக்கும் நிலையில் திமுக தரப்புக்கு செல்வதுதான் ராமதாசுக்கு இருக்கும் வாய்ப்பு. ஆனால், அவர் வந்தால் விசிக கூட்டணியில் இடம் பெறாது என திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ராமதாஸ் என்ன முடிவெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications