முடிஞ்சுதா? சசிகலாவை சேர்த்து கொள்கிறாரா எடப்பாடி பழனிசாமி.. அப்ப ஓபிஎஸ், தினகரன்? பூங்குன்றன் பகீர்
சென்னை: சசிகலாவை, விரைவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் சேர்த்து கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. பூங்குன்றன் என்ன சொல்கிறார்?
மறைந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன்... உதவியாளராக மட்டுமல்லாமல் அதிகாரமிக்கவராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்ந்தவர்.. போயஸ் தோட்டத்தில் செல்லப்பிள்ளையாகவும் வலம் வந்தவர்..!

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆளே எங்கிருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு ஒதுங்கிவிட்டார்.. மவுனமாகிவிட்டார்.. கோயில் குளம் என்று சுத்த ஆரம்பித்துவிட்டார்.. எப்போதாவது அவரை பற்றின செய்திகள் மட்டும் மீடியாவில் வந்துவிட்டு போகும்.
அதிமுக: ஆனால், கடந்த சில காலமாகவே, அண்ணாமலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருவதுடன், சில அட்வைஸ்களையும் வெளிப்படையாகவே தந்து வருகிறார்.. அதேபோல, அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதிமுக ஒன்றுபட வேண்டும், அதிமுகவை அனைவரும் சேர்ந்து வழிநடத்த வேண்டும், என்று விடாமல் அக்கறையுடன் வெளிப்படுத்தி கொண்டேயிருக்கிறார்.. ஒற்றுமையையும் வலியுறுத்தியபடியே உள்ளார்.
அந்த வகையில், பூங்குன்றன் இன்றும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.. அதில், அரசியலை நான் அன்னையிடமிருந்து கற்றுக் கொண்டவன். நான் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு காரணம் உண்டு. ஆன்மீக பதிவை போட்டாலும் சிலர் அரசியல் பதிவாக பதிலளிக்க தொடங்கி விடுகிறார்கள்.
சிலர் நான் போட்ட பதிவை சரியாக படிக்காமல் வேறாக யூகித்துக் கொண்டு அவர்கள் மேலிடத்தில் நல்ல பெயர் எடுப்பதற்காக பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மா அவர்களை புகழ்ந்து பாடும் பதிவுகளிலும் சம்பந்தமே இல்லாமல் கம்பி சுற்றுவதுதான் வேதனை.

தலைவர்கள் பதிவு: நான் போடும் பதிவுகளை பார்த்து தலைவர்களே கோபப்பட மாட்டார்கள். நீங்கள் கோபப்படுவது தான் ஆச்சரியம்! பலருக்கு அம்மாவை மறக்க மனம் இல்லை என்றாலும் இன்றைய தலைவர்களை குஷிப்படுத்துவதற்காக அம்மாவை மறந்தது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் தலைவர்கள் பல பாதைகளை கடந்து வந்தவர்கள். முகநூலில் ஆதரவு பதிவை போட்டு அவர்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைத்து விடாதீர்கள்.
உங்களைப் போன்று பலரைப் பார்த்தவர்கள் அவர்கள். ஒரே நாளில் அவர்கள் தலைவர்களாக ஆகிவிடவில்லை. எல்லாவற்றையும் கடந்து தான் தலைவர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். களத்தில் இறங்கிப் போராடுங்கள். எதிர்க்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். அது உங்களை உயர்வான இடத்திற்கு கொண்டு சொல்லும்.
எதிரிகளை எதிர்க்கப் பயப்படும் நீங்கள் கழகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை எதிர்த்து கொண்டிருக்கிறீர்கள். இன்றைய அரசியல் சூழ்நிலை குழப்பமாகவே இருக்கிறது. யாருக்கு யார் ஆதரவு? யாருக்கு யார் எதிரி? என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. வெளிப்படையாக எதிரிகளாக தெரிபவர்கள் கூட ரகசியமாக பேசிக் கொள்கிறார்களாம்.
பயணம்: தன் நலத்திற்காக எதையும் செய்து கொள்ளத் தயாராகிவிட்டார்கள். காற்று அடிக்கும் திசையில் பயணிக்க காத்திருக்கிறார்கள். ஓபிஎஸ் அவர்களும், ஈபிஎஸ் அவர்களும் இணைவார்கள் என்று பார்த்தால் ஒருவரை ஒருவர் வசை பாடிக் கொண்டிருக்கிறார்கள். இணைவதற்கான வாய்ப்புகள் அருகிக் கொண்டு வருவதாகவே பலர் பேசவும் தொடங்கிவிட்டார்கள்.
ஆனால் அடிமட்ட தொண்டர்களோ இன்று கூட எல்லோரும் சேர்ந்தால் பலமாக இருக்கும் என்று தான் சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். நடப்பவற்றை கூர்ந்து கவனித்தால் மற்றவர்களை புறம் தள்ளிவிட்டு சின்னம்மா அவர்களை மட்டும் ஈபிஎஸ் சேர்த்துக் கொள்வார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அதுவே ஒரு சமுதாயத்தை ஈர்க்கும் விடயம் ஆக அமையும் என்றே உணரத் தோன்றுகிறது.

சாணக்கியத்தனம்: நன்றி மறந்த ஈபிஎஸ் என்று சொல்லும் நாக்கள் நன்றி மறவாத ஈபிஎஸ் என்று சொல்லும் காலம் வருகிறதோ? இது அரசியல் ரீதியான சாணக்கியத்தனமாகவும் இருக்குமோ? எது எப்படியோ கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் கடமையும், பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு நாம் அனைவரும் செயல்பட வேண்டும் என்பதே எனது அவா..! பங்காளிகளிடம் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு, பகையாளிகளிடம் சண்டை போடத் தொடங்குங்கள். வெற்றி உங்களை தேடி வரும் என பூங்குன்றன் பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications