அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் வேறு தேதிகளுக்கு மாற்றம்.. எடப்பாடி அதிரடி முடிவு!
சென்னை: ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த, விருப்ப மனு அளித்துள்ளவர்களுடனான நேர்காணல் முறையே 12.1.2026 மற்றும் 24.1.2026 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அதிமுக, இத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கடந்த டிச.15 முதல் 23-ம் தேதி வரையும், 28 முதல் 31-ம் தேதி வரையும் விருப்ப மனுக்களை பெற்றது. இதில் மொத்தம் 10 ஆயிரத்து 175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதில் 2,187 மனுக்கள், பொதுச்செயலாளர் பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும், தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வேண்டி 7,988 மனுக்களும் பெறப்பட்டன.

இந்நிலையில், அவர்களிடம் ஜனவரி 9 முதல் 13 ஆம் தேதி வரை நேர்காணல் நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் ஜனவரி 9 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், விருப்ப மனு அளித்தவர்களின் தொகுதி மற்றும் வெற்றி வாய்ப்பு நிலவரங்களை அறிய, விருப்ப மனு அளித்தவர்கள் மட்டும், விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தவறாமல், நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதல் நாளான ஜனவரி 9 ஆம் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டத்தை சார்ந்த விருப்ப மனு அளித்தவர்களிடமும், ஜனவரி 10 ஆம் தேதி கன்னியாகுமாரி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருவாரூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை மற்றும் ஜனவரி 11 ஆம் தேதி விருதுநகர், கடலூர், நாமக்கல், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், ஜனவரி 12 ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ஜனவரி 13 ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த, விருப்ப மனு அளித்துள்ளவர்களுடனான நேர்காணல் முறையே 12.1.2026 மற்றும் 24.1.2026 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி, விருப்ப மனு அளித்துள்ளவர்களுடனான நேர்காணல், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 9.1.2026 - வெள்ளிக்கிழமை முதல் 13.1.2026 - செவ்வாய்க் கிழமை வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 11.1.2026 மற்றும் 12.1.2026 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த விருப்ப மனு அளித்துள்ளவர்களுடனான நேர்காணல், மாற்றி அமைத்து முறையே 12.1.2026 மற்றும் 24.1.2026 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications