காலியாகாத திண்ணை.. அம்பையில் அண்ணன் சீமானுக்கு ஆப்பு வைத்த அதிமுக! திமுகவின் ப்ளான் என்ன? பரபர தகவல்
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்து விஜய் ஆட்சி அமைத்து ஆறு மாதங்கள் கடந்து விட்டது. இப்போதைக்கு தமிழக அரசியலில் அடுத்த எதிர்பார்ப்பு இடைத்தேர்தல் தான். திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த இருக்கும் நிலையில் சீமானின் பொது வேட்பாளர் கனவு தகர்ந்துள்ளது. அதிமுக தனி கூட்டணி அமைத்து தான் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.
சீமான் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கும் நிலையில், திமுக இன்னும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் நிச்சயம் கூட்டணி அமைத்து தான் போட்டியிடும் என்கின்றனர். அதற்கான வேளைகளும் நடந்து வருகிறதாம்.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகம். கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது அக்கட்சி. ஆட்சி அமைத்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் தமிழகம் மற்றொரு தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
ஏற்கனவே அம்பாசமுத்திரம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது. இதற்கிடையே காலியாக உள்ள திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தொகுதிகளில் ஏற்கனவே அதிமுகவிலிருந்து தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக கட்சி கழகத்தில் இணைந்த சி விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி கிழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் யார் என்பதுதான் தற்போதைக்கு மிகப்பெரிய கேள்வி. இது ஒருபுறம் இருக்க வழக்கம் போல் இந்த தேர்தலிலும் போட்டியிடுவேன் என அறிவித்திருக்கிறார் சீமான். அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்திருப்பது அரசியல் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. நாடார் முக்குலத்தோர் ஓட்டுகள் அதிகமாக இருப்பதால்தான் சீமான் அந்த தொகுதியை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
சீமான் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது மனைவி கயல்விழி முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொது வேட்பாளராக தன்னை அறிவித்தால் அம்பாசமுத்திரத்தில் வென்று எப்படியாவது முதன் முறையாக சட்டசபைக்குள் தானும் நாம் தமிழர் கட்சியும் சென்றுவிடலாம் என்பது சீமானின் எண்ணம். அதை நோக்கிய அவர் செய்தியாளர் சந்திப்புகளில் பேசி வந்தார்.
ஆனால் தற்போது அதற்கு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது அதிமுக. கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் சட்டசபையில் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுகவும் அதிமுகவும் இணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானமும் கொண்டு வர மாட்டோம். நாங்கள் இருவருமே தனித்தனி கட்சிகள். நாங்கள் தான் வளர பார்ப்போமே ஒழிய.. அடுத்தவர்களை வளர விடமாட்டோம் என பேசி இருந்தார்.
இதன் மூலம் தற்போதைய சூழலில் தமிழக வெற்றி கழகம், அதிமுக கூட்டணி, நாம் தமிழர் என மூன்று முனை போட்டிய நிலவுகிறது. அதே நேரத்தில் திமுக என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதுதான் தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக உள்ளது. அதே நேரத்தில் இதுவரை திமுக இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் தேர்தல் வேலைகள் மறைமுகமாக நடைபெற்று வருகிறது.
கிட்டத்தட்ட வேட்பாளர் தேர்வை நிறைவடைந்துவிட்டது போல தான்.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் வழக்கம் போல் முதல் ஆளாக முந்திக்கொண்டு திமுக வேட்பாளர்களை அறிவிக்கும். அந்த பகுதிகளில் திமுகவினர் தேர்தல் வேலைகளையும் துவக்கி விட்டார்களாம். பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் என முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் தங்கள் வேலைகளை செவ்வனே செய்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் பெரும்பாலும் நான்கு முனை போட்டி தான் இருக்கும் என்கின்றனர். இதனால் இந்த முறையும் சீமான் சட்டசபை செல்வது சிரமம் என்கின்றனர். காரணம் கடந்த தேர்தலில் விஜய் அலையையும் தாண்டி அதிமுக தான் திருச்சி கிழக்கு தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் வென்றிருந்தது. இதனால் இரட்டை இலையின் வாக்கு வங்கி என்பது அங்கு மிகப் பெரிய பலம். மேலும் திமுகவுக்கும் பெரிய வாக்கு வங்கி இருக்கும் நிலையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, முன்பு எதிர்க்கட்சியாக இருந்த கட்சி ஆகியவற்றை தாண்டி சீமான் வெல்வது கடினம் தான் என்கின்றனர்.




Click it and Unblock the Notifications
