தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்! சென்டிமென்ட் எடப்பாடி.. கூல் ஆன செங்கோட்டையன்! ஓபிஎஸ்ஸும் ஓகே தானாம்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மூத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே நிலவி வந்த மோதல் நேற்று கோட்டையில் முடிவுக்கு வந்திருக்கிறது. சபாநாயகர் அறையில் செங்கோட்டையனுக்கு முன்னதாகவே காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அவரை சமாதானம் செய்த நிலையில் எடப்பாடி உடன் கைகோர்த்து இருக்கிறார் செங்கோட்டையன். மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓ.பன்னீர் செல்வமும் பேசி இருப்பது அதிமுக ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக பல பிளவுகளை சந்தித்து இருக்கிறது. ஆனால் மீண்டும் ஒன்று சேர்ந்து ஆட்சியைப் பிடித்தது தான் வரலாறு. ஜானகி அம்மாள் - ஜெயலலிதா பிரிவு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் எடப்பாடி பிரிவு, இரட்டை இலை சின்னம் முடக்கம் என பல சிக்கல்களை அந்த கட்சி சந்தித்திருக்கிறது.

ஜெயலலிதா மறைவின் போது முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்தார். அப்போது சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஓரங்கட்டப்பட்டனர். தொடர்ந்து 2021 தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் ஓ,பன்னீர் செல்வமும் ஓரங்கட்டப்பட்டார்.
ஆனால் சசிகலா, டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரது வெளியேற்றத்தை பெரிதாக கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியதால் சற்றே அதிர்ந்து போனதுதான் உண்மை. காரணம் கொங்கு மண்டலத்தில் அதிமுகவை வலுவாக வைத்திருப்பதற்கு செங்கோட்டையன் முக்கிய காரணம் என்பதை எடப்பாடி பழனிச்சாமி நன்றாகவே உணர்ந்திருந்தார். இதற்கெல்லாம் காரணம் பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வு தான் காரணம்.
அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தியதாக எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாய அமைப்புகள் பாராட்டு விழா நடத்தின. அதன் அழைப்புகள் மற்றும் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் படம் இல்லை எனக் கூறி அதில் பங்கேற்காமல் செங்கோட்டையன் புறக்கணித்தார். அப்போது இருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவே அவர் செயல்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை பொதுக்கூட்டத்தில் மறைமுகமாக எடப்பாடியை விமர்சிப்பது என அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அதிமுக அணிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் எதிர்பார்ப்புக்கு எடப்பாடி பழனிச்சாமி முட்டுக்கட்டை போட அதன் காரணமாகவே செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறின. இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா, மகளிர் தின விழா, எஸ்பி வேலுமணியின் இல்ல திருமண வரவேற்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளிலும் எடப்பாடி பழனிச்சாமியை செங்கோட்டையன் புறக்கணித்தார்.
சட்டசபை கூட்டத் தொடரில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கைகள் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் கூட்டமும், வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்தார். அதிமுக எம்எல்ஏக்கள் அறையில் அமராமல் சபாநாயகர் அறையிலேயே அவர் அமர்ந்திருந்தார். இந்த நிலையில் நேற்று சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுக தரப்பில் கொண்டுவரப்பட்டது.
அப்போதும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து செங்கோட்டைய தன்னை புறக்கணிப்பதை ஊடகங்களும் பெரிதாக்குவதை உணர்ந்த எடப்பாடி பழனிச்சாமி சில முன்னாள் அமைச்சர்களை செங்கோட்டையனை சமாதானம் செய்யுமாறு அனுப்பினார். வழக்கம்போல சபாநாயகர் அறைக்கு செங்கோட்டையன் சென்ற நிலையில் அதற்கு முன்னதாகவே எஸ்பி வேலுமணி தங்கமணி உள்ளிட்டோர் காத்திருந்தனர்.
தொடர்ந்து அங்கே வைத்து செங்கோட்டையனிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. கட்சி தலைவர்களுக்குள் வேறுபாடு வருவது சகஜம்தான் எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம், வாருங்கள் அண்ணே என எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த மெசேஜை தங்கமணி செங்கோட்டையனிடம் பாஸ் செய்து இருக்கிறார். இதை அடுத்து வரும் காலங்களில் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் பிரிந்தவர்களை ஒன்றிணைத்துக் கொள்ளலாம் என சமாதானம் செய்யப்பட்ட நிலையில் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி உடன் பேரவையிலும் பேசியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவுடன் நெருக்கமாகி வருகிறார். தொடர்ந்து அதிமுக ஒன்றாக வேண்டும் என பன்னீர்செல்வம் கூறிவரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியோ அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் சிறிது நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான ஐயப்பன், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் வெளியேறினர்.
நேற்று சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவே ஓ.பன்னீர்செல்வம் பேசி இருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது அதிமுக ஒன்றாக வேண்டும் என்பதே எனது விருப்பம் எனக் கூறியிருந்தார். இதன் மூலம் மீண்டும் அதிமுகவில் வருவதற்கான சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு பதில் சிக்னல் கிடைக்குமா என எதிர்பார்த்து இருக்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். இன்னும் ஒரு ஆண்டுக்குள் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நிகழலாம் என்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications