திமுக அரசுக்கு எதிரான முதல் ஆர்ப்பாட்டம்... விழுப்புரத்தில் கணக்கை தொடங்கி வைக்கும் சி.வி.சண்முகம்..!
சென்னை: அதிமுக ஆட்சியின் போது விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முடிவை கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறார்.
விழுப்புரம் பழைய பேருந்துநிலையம் முன்பாக நாளை காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்தும் அவர், ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.
இதனிடையே பெயர் வைப்பதற்காகவே ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவது முறையாக இருக்காது என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்திருக்கிறார்.

தேர்தல் வாக்குறுதி
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 28-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்திருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி திமுக அரசுக்கு எதிரான அதிமுகவின் முதல் ஆர்ப்பாட்ட கணக்கை விழுப்புரத்தில் தொடங்கி வைக்கிறார் சி.வி.சண்முகம்.

முதல் ஆளாக
விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் அறிவித்திருந்தார். இதற்கு முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மண்ணின் மைந்தருமான சி.வி.சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு முதல் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தவிருக்கிறார்.

ஜெ.ஜெ. பல்கலை
இதனிடையே ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்பது தேவையில்லாத ஒன்று என்றும் நூற்றாண்டு பழமை மிக்க அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதை தான் மாணவர்கள் விரும்புவதாகவும் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்திருக்கிறார். மேலும், பெயர் வைப்பதற்காகவே ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவது முறையாக இருக்காது எனவும் தெரிவித்தார்.

சட்டப்போராட்டம்
திமுக அரசை கண்டித்து நாளை நடத்தும் ஆர்ப்பாட்டம் முதற்கட்ட எதிர்ப்பு தான் என்றும் ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் தாம் பின்வாங்கப்போவதில்லை எனவும் கூறி வருகிறார் சி.வி.சண்முகம். இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அனுமதி கிடைத்ததா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications