சட்டசபை தேர்தலில் திமுக, லோக்சபா தேர்தலில் பாஜகதான் எதிரிகள் அறிவித்த விஜய்.. ஆடிப் போன அதிமுக!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சித்தாந்த எதிரியாக பாஜகவையும் அரசியல் எதிரியாக திமுகவையும் பிரகடனம் செய்திருக்கிறார் நடிகர் விஜய். அதாவது சட்டசபை தேர்தலில் திமுகவையும் லோக்சபா தேர்தலில் பாஜகவையும் எதிர்த்துதான் விஜய் களம் காண இருக்கிறார். தமிழ்நாட்டில் திமுக, பாஜகவை ஒருசேர எதிர்க்க வேண்டிய அதிமுகவின் இடத்தை குறிவைத்துள்ளார் நடிகர் விஜய் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
நடிகர் விஜய் தமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாட்டை இன்று விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை என்ற இடத்தில் பிரம்மாண்டமாக நடத்தினார். தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

பொதுவாக நடிகர் விஜய், மென்மையாக பேசக் கூடியவர்; அதிர்ந்து அதிகம் பேசாதவர். ஆனால் தமது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் உரத்த குரலில் பல்வேறு பிரச்சனைகள், நிலைப்பாடுகளை விவரித்திருக்கிறார். தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் என 5 வழிகாட்டித் தலைவர்களை அறிவித்த விஜய், கொள்கை மற்றும் செயல் திட்டங்களையும் வெளியிட்டார்.
நடிகர் விஜய் பேச்சு மற்றும் அவரது கட்சியின் கொள்கைகள் அனைத்தும் இன்னொரு "திராவிட" கட்சியாக வெளிப்பட்டு நிற்கிறது. மதச்சார்பற்ற சமூக நீதி, ஒன்றே குலம் ஒருவனே தேவன், பெண் உரிமை, மாநில தன்னாட்சி, ஆளுநர் பதவி ஒழிப்பு என திராவிட அரசியல் கட்சிகளின் அடிநாதங்களே முழக்கமாக முன்வைத்துள்ளார் நடிகர் விஜய்.
அதேநேரத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுகவின் திராவிட மாடல் அரசை வெளிப்படையாக தமது அரசியல் எதிரியாக அறிவித்துள்ளார் விஜய். தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்கக் கூடிய, திமுகவுடன் கூட்டணி சேரவே வாய்ப்பில்லாத கட்சிகள் இரண்டுதான். ஒன்று அதிமுக, மற்றொன்று நாம் தமிழர் கட்சி. இந்த இரு கட்சிகளின் வாக்கு வங்கியை குறிவைக்கும் வகையில்தான் விஜய் பேச்சின் பெரும் பகுதி இருந்தது.விஜய் வெளியிட்ட கொள்கைகளும் செயல்திட்டங்களும் இந்த இரு கட்சிகளின் வாக்குகளுக்கு வேட்டு வைக்கும் வகையில்தான் இருக்கின்றன.
அதேபோல தொடக்கம் முதலே பாஜகவை கடுமையாக சித்தாந்த எதிரியாகவே பிரகடனம் செய்திருக்கிறார் விஜய். தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிரான அரசியலைப் பேசுவதன் மூலம் வாக்குகளைப் பெற முடியும்; பாஜகவுக்கு எதிரான அரசியலைப் பேசுவதன் மூலம் நிலைத்து நிற்க முடியும் என்ற வியூகத்தின் அடிப்படையில்தான் திமுக, பாஜகவை எதிரிகளாக கட்டமைத்துள்ளார்.
உண்மையில் நடிகர் விஜய்-ன் தமிழக வெற்றிக் கழகமானது அண்ணா திமுக எந்த இலக்கை நோக்கி பயணித்திருக்க வேண்டுமோ அந்த இடத்தை கையில் எடுத்திருக்கிறது. அதிமுகவின் நிரந்தர எதிரி திமுக; திமுகவுக்கு எதிரான அரசியலை அதிமுக வீச்சாக கையில் எடுக்காத நிலையில் நடிகர் விஜய் அரசியல் எதிரியாக திமுகவை அறிவித்து களம் காண்கிறார். அதேபோல பாஜகவை எதிர்த்திருக்க வேண்டிய அதிமுக, இன்னமும் ஏதோ ஒருவகையில் பாஜகவுக்கு எதிராக தீவிரம் காட்டவில்லை. இந்த இடத்திலும் சித்தாந்த எதிரியாக பாஜகவை முன்வைத்து களம் காண்கிறார்.
நடிகர் விஜய் முன்வைத்திருக்கும் இந்த நிலைப்பாடுகள் என்பவை சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு எதிராகவும் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராகவும் தமிழக வெற்றிக் கழகம் களம் காணும் என்பதை பிரகடனப்படுத்தி இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications