சென்னை: பிரபல மால் உள்ளே திடீர் பரபரப்பு.. "யார் அந்த சார்?” பதாகைகளுடன் சுற்றி நின்ற அதிமுகவினர்!
சென்னை: சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் இன்று அதிமுக ஐடி விங் அணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டிக்கும் வகையில் "யார் அந்த சார்..?" என்ற கேள்வியுடன் அதிமுக சார்பில் பதாகைகள் ஏந்தி, மக்களிடம் விளக்கி போராட்டம் நடத்தி உள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் சாலையோரம் பிரியாணி கடை வைத்திருந்த ஞானசேரன் என்பவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பான முதல் தகவல் அறிக்கை கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றது. அப்போது, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு இனி விசாரணை செய்யும் எனவும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இ்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரை பற்றி தகவல்களை தெரிவித்த சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழக அரசையும், காவல்துறையையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் செல்போனில் பேசியபோது சார் (Sir) என்ற வார்த்தையை பயன்படுத்தினார் என அந்த மாணவி அளித்த புகாரில் தெரிவித்ததாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
யார் அந்த சார்?
யார் அந்த சார்? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் போலீசார், அந்த மாணவியை மிரட்டுவதற்காக சும்மா அவ்வாறு பேசியுள்ளார். அந்த சமயத்தில் ஞானசேகரனின் செல்போன் ஏரோபிளேன் மோடில் இருந்தது எனத் தெரிவித்தனர். ஆனால் அதிமுக தலைவர்கள் தொடர்ந்து, "யார் அந்த சார்?" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர், "யார் அந்த சார்?" என்ற வாசகத்துடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். சென்னை, கரூர், தஞ்சாவூர், நெல்லை என பல்வேறு பகுதிகளிலும், இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார் (SIR)?, #Save Our Daughters என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளன.
எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் பரபரப்பு
இந்நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அதிமுகவினர் ஏராளமானோர் திடீரென குவிந்தனர். அவர்கள் மாலின் உள்ளே நுழைந்து, கைகளில் பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். அவர்களது கைகளில் வைத்த பதாகைகளில் "யார் அந்த சார்?" என்ற வாசகம் இடம் பெற்று உள்ளது.
அதிமுக ஐடி விங் அணியினர், எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இருந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம், இது தொடர்பாக எடுத்துரைத்து, தமிழக அரசுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications