புரட்டாசி மாதத்தில் ரோபோ சங்கர் பற்றி டிவி சேனல்கள் லைவ் காட்டுவது சரியில்லை: அதிமுக ஆதரவாளர் கிஷோர்
சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மறைவு குறித்து செய்திகள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் புரட்டாசி மாதம் முதல் நாளே மரண செய்தியை டிவி சேனல்கள் லைவ் காட்டுவது சரியில்லை என்று அதிமுக ஆதரவாளர் கிஷோர் கே சாமி அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.
திரைக்கலைஞர்கள் மறையும்போது இந்த சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை விட்டு செல்கிறார்கள். மனித வாழ்கையின் இயக்கத்தை திரைக்கலைஞர்கள் ஓரடி முன்னகர்த்தி வைக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. அதிலும் குறிப்பாக நகைச்சுவை கலைஞர்கள் இல்லையென்றால் மனித வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசித்து கூட பார்க்கவே முடியாது.

அந்த வகையில், நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில ஆண்டுகளாகவே நம்மை சோகங்களை மறந்து சிரிக்க வைத்திருக்கிறார். ஆனால் நேற்று அவர் உயிரிழந்துவிட்டார். அவரது மறைவு திரைத்துறையினரை மட்டுமின்றி அத்தனை மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்திருந்த ரேபோ சங்கர், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிர் பிரிந்தது.
அவரது மறைவுக்கு முதல்வர், துணை முதல்வர் தொடங்கி திரைநட்சத்திரங்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், புரட்டாசி மாதம் முதல் நாள் அதுவுமா, ரோபோ சங்கர் மறைவு செய்தியை டிவி சேனல்கள் லைவ் காட்டுவது சரியில்லை என்று அதிமுக ஆதரவாளர் கிஷோர் கே சாமி புலம்பி தள்ளியிருக்கிறார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "மரியாதைக்குரிய ரோபோ சங்கர் அவர்களின் மறைவுக்கு நான் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு வெள்ளிக்கிழமை காலையில், அதுவும் புரட்டாசி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று, வீடு முழுவதும், இறந்த கலைஞரின் வீட்டில் இருந்து வரும் சோகமான ஓசைகள், வருத்தமான வயலின் இசை என நேரடி ஒலிபரப்புடன் கேட்பது என்பது வீட்டிற்குள் எதிர்மறை அதிர்வுகளை வரவேற்பது போலாகும்.
தமிழகத்தில் பல லட்சம் வீடுகளில் இதுதான் நடக்கிறது. அதிர்ஷ்டவசமாக என் வீட்டில் அப்படி இல்லை. தமிழக ஊடகங்களும் சமூக ஊடகங்களும் இந்த சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு" என்று சாடியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications