அதிமுக எம்.எல்.ஏக்களை திரட்டும் எடப்பாடி.. ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்த கையோடு அடுத்த ஆக்ஷன்!
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 4ஆம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவி இடங்களுக்கு வரும் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதில், ஆளும் திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு பாஜக ஆதரவுடன் இரண்டு இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. திமுக சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் கமல்ஹாசன் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் இரண்டு இடங்களுக்கு யார் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில், தேமுதிக தங்களுக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில், இரண்டு மாநிலங்களவை பதவி இடங்களுக்கான தேர்தலில் அதிமுகவே போட்டியிட உள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி வேட்பாளர்களை அறிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேமுதிகவிற்கு 2026 ஆம் ஆண்டு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்றும் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
இந்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 4 ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 4ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
அதிமுக 2 ராஜ்யசபா இடங்களை வெல்ல, 68 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அதிமுகவில் எடப்பாடி தரப்பின் வசம் தற்போது 62 பேர் உள்ளனர். இன்னொருவரை தேர்வு செய்ய இன்னும் 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. பாஜகவின் 4 எம்.எல்.ஏக்கள், ஓபிஎஸ் அணியின் 4 எம்.எல்.ஏக்கள், பாமகவின் 5 எம்.எல்.ஏக்களிடம் அதிமுக தரப்பு ஆதரவு கேட்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications