ராஜ்யசபா எம்பியாகிறாரா அதிமுக பேச்சாளர் நடிகை விந்தியா! அப்போ அண்ணாமலைக்கு?
சென்னை: தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதிமுக சார்பில் நடிகை விந்தியா, இன்பதுரை ஆகிய இருவரில் ஒருவருக்கு சீட் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் அன்புமணி ராமதாஸ், தொமுச சண்முகம், சந்திரதேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைய போகிறது.

காலியாக உள்ள 6 எம்பி பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் ஜூன் 2ஆம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
வேட்புமனு
ஜூன் 9-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஜூன் 10 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜூன் 12 ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். மொத்தம் 6 சீட்டுகளில் அதிமுக, திமுகவுக்கு எத்தனை என்பதை பார்க்கலாம்.
34 எம்எல்ஏக்களின் பலம்
ஒரு எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அவர்கள் ஒரே கட்சியாக இருக்கலாம். இல்லாவிட்டால் கூட்டணி கட்சியினராகவும் இருக்கலாம். அந்த வகையில் தமிழக சட்டசபையில் திமுகவின் பலம் 133 ஆக உள்ளது. காங்கிரஸ் 17, விசிக 4, சிபிஐ, சிபிஎம் தலா 2 உள்ளன.
திமுக கூட்டணி
எனவே திமுகவுக்கு கூட்டணி கட்சியினர் ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 4 ராஜ்யசபா சீட்டுகள் கிடைக்கும். அந்த 4 பேரில் வில்சன், அப்துல்லா, கமல்ஹாசன் ஆகியோருக்கு கொடுக்கப்படும் என தெரிகிறது. மேலும் ஒரு சீட் ,தொமுசவை சேர்ந்தவருக்கு வழங்கப்படும் என்கிறார்கள். இந்த ஒரு சீட்டை தான் காங்கிரஸ் பெற முயற்சிக்கிறது.
66 எம்எல்ஏக்கள்
இது ஒரு புறமிருக்க அதிமுகவை எடுத்துக் கொண்டால் அவர்களது சட்டசபை பலம் 66 ஆக உள்ளது. இரு எம்பி பதவிகளுக்கு 68 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு 4, பாமகவுக்கு 4 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.
ஒரு எம்பி பதவி
ஒரு எம்பி பதவி உறுதியாகிவிட்ட நிலையில் இன்னொரு எம்பி பதவிக்கு கூட்டணி கட்சியான பாஜகவின் உதவியை அதிமுக நாடும் என தெரிகிறது. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்களே. அது போல் எடப்பாடி பழனிசாமி இரு ராஜ்யசபா சீட்டுகளை விடக் கூடாது என நினைக்கிறார்.
அண்ணாமலை
ஆனால் பாஜகவோ அண்ணாமலைக்கு எம்பி பதவி வழங்க அதிமுகவின் உதவியை நாடும் என தெரிகிறது. இந்த ராஜ்யசபா சீட்டை அண்ணாமலைக்கு வழங்கினால், சொந்த கட்சியினரின் அதிருப்தியை எடப்பாடி சம்பாதிப்பதுடன் வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் நிலை உள்ளது.
இரு ராஜ்யசபா சீட்டு
இதனால் அந்த இரு ராஜ்யசபா சீட்டுகளையுமே அதிமுக பெற முயற்சிக்கிறது. சரி, இரு ராஜ்யசபா சீட்டுகள் கிடைத்துவிட்டால் யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவற்றில் ஒன்று விந்தியாவுக்கோ அல்லது இன்பதுரைக்கோ வழங்கலாம் என தெரிகிறது.
ஜெயலலிதா
அதிமுக முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில் இருந்தே அதிமுக நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார். எந்த தேர்தல் என்றாலும் பொதுக் கூட்டம் என்றாலும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்வதில் விந்தியா வல்லவர்.
சிறப்பான வாதம்
அது போல் சரியான நேரத்தில் பதிலடி கொடுப்பதிலும் அவர் சிறந்தவர் என எடப்பாடி கருதுகிறார். நீண்டகாலமாக கட்சியில் இருக்கும் விந்தியாவுக்கு இந்த பதவியை கொடுக்க அதிமுக தலைமை முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. இன்பதுரையும் பல்வேறு வழக்குகளில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் வாதாடியுள்ளார். அதனால் இவருக்கு சீட் வழங்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் கோகுல இந்திரா, ஜெயக்குமார் உள்ளிட்டோர் மக்களவை அல்லது மாநிலங்களவை பதவிக்கு முயற்சித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுப்பார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications