கள்ளச்சாராயத்தால் நிர்க்கதியான குழந்தைகள்! 10 ஆண்டுகளுக்கான கல்வி செலவை அதிமுக ஏற்கிறது: இ.பி.எஸ்
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அடுத்த 10 ஆண்டுகளுக்கு அதிமுக ஏற்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இப்படி குடித்தவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. எனவே உறவினர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

ஆனால், இதில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு 5-8 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பிற்பகல் நிலவரப்படி சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க மதுவிலக்கு பிரிவு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பாக்கெட்டில் சாராய விற்பனை தமிழகத்தின் பல பகுதிகளில் படுஜோராக விற்பனை செய்யப்படு வருகிறது என தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இப்படி இருக்கையில்தான் கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் குடித்த 35 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடி ஆக்ஷனில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண் குமார் ஜடாவத்தை பணியிடமாற்றம் செய்தும் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மதுவிலக்குப் பிரிவையே கூண்டோடு சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதேபோல உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில், இச்சம்பவத்திற்கு தமிழக அரசுதான் முழு காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. கள்ளச்சாரயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாக திறமையற்றவர் என்றும், எனவே உடனே அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
"இந்த அரசே செயல்படாமல் உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினே சொல்கிறார். நான் இரவில் தூங்கி காலையில் எழுந்ததும் என் கட்சி நிர்வாகிகளால் எந்த பிரச்சினை ஏற்படுமோ என்று அவரே சொல்லியிருக்கிறார். கட்சி அவரது கட்டுப்பாட்டிலேயே இல்லை. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்து இருப்பது மன வேதனை அளிக்கிறது.
மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இவர்கள் அனைவரும் ஏழைகள். பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த கள்ளச்சாராயம் விற்கப்பட்ட பகுதி கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதி. இந்த கள்ளச்சாராயம் விற்பனை நடந்த இடத்திற்கு அருகே தான் காவல் நிலையம் உள்ளது. அதன் அருகே தான் நீதிமன்றம் இருக்கிறது. அதோடு மாவட்ட காவல் கண்காளிப்பாளர் இங்கே இருக்கிறார்.
மாவட்ட ஆட்சியர் இருக்கிறார். இப்படி, இவ்வளவு அதிகாரிகள் இருக்கின்ற மாவட்ட தலைநகரத்தில் காவல் நிலையத்திற்கு பின்புறமே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்றால் இந்த நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்று நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். எங்களுக்கு கிடைத்த தகவல் படி, இதற்கு பின்னால் மிகப்பெரிய கும்பலே இருப்பது தெரியவந்துள்ளது.
அதுவும் ஆளுங்கட்சியை சேர்ந்த அதிகாரமிக்கவர்களே இந்த கள்ளச்சாராய சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இல்லாவிட்டால் இவ்வளவு துணிச்சலாக, நகரத்தின் மையப்பகுதியில் காவல்நிலையத்தின் பின்புறமே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுமா?.. இது மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இரவில் இருந்து ஒவ்வொருவராக உயிரிழந்து வருவது ரொம்ப அதிர்ச்சியை அளிக்கிறது.
இதேபோல் போதைபொருள் விவகாரத்திலும் தொடர்ந்து திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வந்தேன். ஆனால் அதற்கும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. முன்பும் இதேபோல் ஒரு சம்பவம் நடந்தது. அப்போதே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து இருந்தால் இப்போது இப்படி நிகழ்ந்திருக்காது. இப்போது 36 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வளவு பேர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்த நிர்வாக திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அதேபோல, கள்ளச்சாராயம் காரணமாக பெற்றோரை இழந்த மூன்று குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஏற்கும் என்று அறிவித்திருக்கிறார். இக்குழந்தைகளுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5000 வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications