அதிமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும்.. உங்களுக்கு ஏன் பயம்.. ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்
சென்னை: நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி தான். ஆனால் நீட் தேர்வை அதிமுக தான் கொண்டு வந்தது என்ற ஒரு தவறான பிம்பம் பரப்பப்படுகிறது. அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்ததற்கு முதல்வர் ஸ்டாலின் பதற்றமடைகிறார். அதிமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும், இது எங்கள் உரிமை. நாங்க யாரோடு கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன என ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வு விவகாரம் குறித்து இன்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி இடையே நேருக்கு நேர் விவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய ஸ்டாலின், நீட்டை ரத்து செய்தால் தான் நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருப்போம் இல்லையென்றால் கூட்டணியை விட்டு விலகுவோம் என்று சொல்வதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா? என்று கேள்வி கூறினார்.

ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்
மேலும் பாஜகவுடன் கூட்டணியே வைக்க மாட்டோம் என்று கடந்த 2 மாதத்துக்கு முன்பு சொல்லிவிட்டு, இப்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறீர்களே நீங்கள் தான் மக்களுக்கு துரோகம் செய்கிறீர்கள் என்று ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த நிலையில் சட்டசபை வளாகத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்து ஸ்டாலின் பதற்றமடைந்துள்ளார்.
அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுவிட்டது. இதன் வெளிப்பாடு தான் சட்டசபையில் அப்படி பேசுகிறார். நீட் தேர்வை திமுக - காங்கிரஸ் கூட்டணி தான் கொண்டு வந்தது என்றும் கூறினார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி தான். ஆனால் நீட் தேர்வை அதிமுக தான் கொண்டு வந்தது என்ற ஒரு தவறான பிம்பம் பரப்பப்படுகிறது.
யாருடன் கூட்டணி வைத்தால் என்ன?
நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வை வர விடாமல் செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்தோம். ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் எதுவும் செய்ய முடியவில்லை. இதை எல்லாம் தெரிந்து கொண்ட பின்னர் தான் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று திமுகவினர் பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துவிட்டு இப்போது நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று கூறி வருகிறார்கள்.
நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்தே ஸ்டாலினுக்கு பதற்றம் வந்துவிட்டது. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன. அதிமுக யாருடனும் கூட்டணி வைக்கும். இது எங்கள் உரிமை. யாருடன் நாங்கள் கூட்டணி வைப்க்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். உங்களுக்கு ஏன் பதற்றம். நீங்க ஏன் பதற்றமடைகிறீர்கள்.
இப்போது கசக்கிறதா?
ஏனென்றால் அவர் மட்டும் மெகா கூட்டணி என்று சொல்வாராம். நாங்க மெகா கூட்டணி வைத்தால் தோற்றுவிடுவோம் என்று அச்சப்படுகிறார். வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என்று ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. இதன் வெளிப்பாடு தான் ஸ்டாலின் அப்படி பேசுகிறார். 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒருமித்த கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும். நிச்சயமாக அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
முரசொலி மாறனை ஒரு வருடம் இலாகா இல்லாத அமைச்சராக பாஜக திமுகவிற்கு நல்ல கட்சியாக தெரிந்தது. அப்போது அவர்களுக்கு இனித்தது. ஆனால் இப்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு ஏன் என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி கேட்கிறார். இப்போது என்ன கசக்கிறதா? இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications