பில்டிங் ஓகே.. பேஸ்மென்டை ஸ்ட்ராங் ஆக்கும் எடப்பாடி! ‘அண்ணனுடன்’ ரகசிய பேச்சு? பரபரக்கும் பாலிடிக்ஸ்
சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. திமுக கூட்டணி நூற்றுக்கு நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டுமே அதிகாரப்பூர்வமாக இருக்கிறது. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வர தீவிரம் காட்டி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் சீமானுடன் பாஜக பேசி வருவதாக கூறப்பட்ட நிலையில், தன் பங்குக்கு எடப்பாடி பழனிசாமியும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கு எப்படியோ, அதிமுகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இருக்கிறது. காரணம் 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று இரண்டு முறை ஆட்சியைப் பிடித்தார் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு பல்வேறு சிக்கல்களை சந்தித்த அதிமுக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியது.
ஆனால் அதற்குப் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக இரண்டு மக்களவைத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல், ஒரு சட்டமன்றத் தேர்தல் என எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எதிர்கொண்ட தேர்தல்களில் தோல்வியே மிஞ்சியது.

இந்த நிலையில் பல்வேறு சிக்கல்கள் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக ஆகி இருக்கும் நிலையில் 2026 தேர்தல் அவருக்கு விஷ பரீட்சை தான். நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக கூட்டணியிலிருந்து வெளியேற்றிய பாஜகவை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். மேலும் ஏற்கனவே பாஜக, அதிமுக கூட்டணிகளில் பயணித்த பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போதைக்கு அதிமுக கூட்டணியில் பாஜகவும் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் மட்டுமே இருக்கிறது.
மறுபக்கம் திமுகவிலோ கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது தான். திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. இது தவிர பல்வேறு சமுதாய, சாதி அமைப்புகளும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கின்றன. இந்த நிலையில் திமுக கூட்டணியை எதிர்க்க வலுவான கூட்டணி வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
ஏற்கனவே பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வருவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில், 8% வாக்குகளோடு மாநில கட்சி அங்கீகாரம் பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சியுடன் பாஜக பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் சீமான் தனித்து போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறார் என்கின்றனர் நாம் தமிழர் தம்பிகள். காரணம் இதுவரை தனித்துப் போட்டியிட்டே எட்டு சதவீத வாக்குகளை பெற்ற நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும், குறைந்தது ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என சீமான் காய் நகர்த்தி வருகிறார்.
தோல்வி ஒன்றும் புதிதல்ல ஆனால் வெற்றி பெற்றால் அது தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என்பது சீமானின் எண்ணம். ஆனால் கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டு பின்பு கூட்டணியில் இணைந்து எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்தை மேற்கோள் காட்டி எடப்பாடி பழனிச்சாமி சீமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 130க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் நிலையில் 25 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும், 20 தொகுதிகளில் பாஜக மீதமுள்ள தொகுதிகளில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை போட்டியிட வைக்கலாம் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்கின்றனர் நம்மிடம் பேசிய அதிமுகவினர்.
அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் இருப்பதால் சீமான் தயக்கம் காட்டுகிறார். மேலும் இந்த தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுவது தான் அவரது திட்டம் என்கின்றனர். மேலும் சில தொகுதிகளுக்கு வேட்பாளர் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பல தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தயாராக இருக்கின்றனர். இந்த நேரத்தில் கூட்டணி சரிப்பட்டு வருமா என சிந்திப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நாம் தமிழர் தரப்பில் விசாரித்த போது கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை, தனித்து தான் போட்டியிடுகிறார் சீமான் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications