விஜய் முடியாதுனு சொல்லியும்! 2026 சட்டசபை தேர்தல் கூட்டணிக்கு அழைக்கும் எடப்பாடி பழனிசாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் அ.தி.மு.க. மறைமுகமாக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதா என்ற கேள்விக்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். பா.ஜ.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணியில் பிளவு, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை குறித்துப் பல்வேறு விஷயங்களை அவர் விவாதித்துள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஓர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

admk edappadi palanisamy vijay

கேள்வி: ஜூலை 7ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய பிரச்சாரத்திற்கு கிடைத்த வரவேற்பு எப்படி இருக்கிறது?

பதில்: நான் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் பெரும் வரவேற்பு அளிக்கிறார்கள். எங்குச் சென்றாலும் மக்கள் அலை அலையாகத் திரண்டு வருகிறார்கள்.

கோட் சூட் முதல்வர்

கேள்வி: "கோட் சூட் முதல்வர்" என முதலமைச்சர் ஸ்டாலினை நீங்கள் விமர்சித்திருந்தீர்கள். இவர் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் எதையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினீர்கள். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினோ இந்த நாட்டிலேயே திராவிட மாடல் அரசுதான் சிறப்பானது எனக் கூறியிருக்கிறாரே?

பதில்: முதல்வராக அவரது தோல்விகள் குறித்து மக்கள் என்னிடம் என்ன சொன்னார்களோ, அதைத்தான் நானும் சொன்னேனே தவிர, நானாக எதையும் சொல்லவில்லை. தனது ஆட்சியில் மக்கள் எத்தகைய துன்பங்களை சந்தித்து வருகிறார்கள் என்பது குறித்துப் புரிந்துகொள்ளாமல் முதலமைச்சர் ஸ்டாலின், அதிகார ஆணவத்தைப் பயன்படுத்தி தன்னைச் சிறந்த முதல்வராகக் காட்டிக்கொள்கிறார்.

தொகுதி பங்கீடு

கேள்வி: தி.மு.க.விலும் அ.தி.மு.க.விலும் கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகள் அதிக தொகுதிப் பங்கீட்டை எதிர்பார்க்கிறார்களே, அது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: கூட்டணிக் கட்சிகள் தங்கள் வளர்ச்சிக்காக நிறைய தொகுதிகளைக் கேட்பது இயல்பானதுதான். தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, அக்கட்சியின் செல்வாக்கு சரிந்துள்ளது. இதனால் அதன் கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கு அதிக முக்கியத்துவம் கோரி வருகின்றன. எனவே, தி.மு.க. தன் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும்.

திமுக கூட்டணி சிதையுமா

கேள்வி: சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க. கூட்டணி சிதைந்துவிடும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: தி.மு.க. கூட்டணி உடைந்துவிடுமா இல்லையா என்பதை என்னால் கூற இயலாது. ஆனால் அண்மைக்காலமாக தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இவை ஊடகத்தின் வாயிலாக வெளிப்படையாகத் தெரிகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்திருந்தார். அதுபோல மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகமோ, ஓர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபோது, "தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த 98 சதவீத வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை" என விமர்சித்திருந்தார். எனவே இது போன்ற கருத்து வேறுபாடுகள் தி.மு.க. கூட்டணியில் உள்ளன. இவை கூட்டணி சிதைவதைக் காட்டுகின்றன. ஆனால் தி.மு.க. கூட்டணி உடையுமா என்பதை யூகமாகச் சொல்ல முடியாது.

அதிமுகவினர் முட்டாள்கள் இல்லை

கேள்வி: வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கூட்டணி ஆட்சி நடைபெறும் என பா.ஜ.க. தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் திருத்துறைப்பூண்டியில் நீங்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது, ஆட்சியைப் பகிர்ந்து கொள்ள "அ.தி.மு.க.வினர் முட்டாள்கள் இல்லை" என்று கூறினீர்கள். உங்கள் நிலைப்பாடு என்னவென்பதைத் தெளிவுப்படுத்த முடியுமா?

பதில்: நான் எந்த உள்நோக்கத்துடனும் அந்த வார்த்தையைக் கூறவில்லை. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியைச் சிதைக்க தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முயற்சிக்கின்றன. "பா.ஜ.க., அ.தி.மு.க.வை அப்படியே விழுங்கப் போகிறது" என்றெல்லாம் சொன்னார்கள். எங்கள் கூட்டணியைச் சிதைக்க நினைக்கும் தி.மு.க.வின் சதியை முறியடிக்கவே திருத்துறைப்பூண்டியில் நான் அவ்வாறு பேசினேன்.

முரண்பாடுகள்

கேள்வி: கூட்டணி ஆட்சி என்ற முரண்பாடுகளைக் களையுமாறு பா.ஜ.க. தலைமையிடம் பேசுவீர்களா?

பதில்: எந்த முரண்பாடும் இல்லை. எந்த ஒரு கட்சியும் தங்களது தொண்டர்களை உற்சாகப்படுத்த இதுபோன்ற வார்த்தைகளைச் சொல்வதுண்டு. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியை உடைக்கப் பலர் முயற்சிக்கிறார்கள். அது நடக்காது. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி 100 சதவீதம் தொடரும்.

ரகசிய பேச்சு

கேள்வி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யுடன் அ.தி.மு.க. இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதா?

பதில்: இதுவரை அது போன்ற கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை த.வெ.க.வுடன் அ.தி.மு.க. மேற்கொள்ளவில்லை.

கேள்வி: உங்கள் கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு அழைப்பு விடுப்பீர்களா?

பதில்: தி.மு.க. ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும்.

விஜய்க்கு அழைப்பு

கேள்வி: இது விஜய்க்கு பொருந்துமா?

பதில்: விஜய்யும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத்தான் போராடுகிறார். எனவே எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது அவருடைய கட்சிக்கும் பொருந்தும்.

கேள்வி: சீமானின் நாம் தமிழர் கட்சி குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: எங்களது பொதுவான கருத்து என்னவென்றால், இந்த கட்சி அந்தக் கட்சி என்றில்லை, தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நினைக்கும் யாராக இருந்தாலும் எங்கள் கூட்டணிக்கு வரலாம். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. உரிய நேரத்தில் கூட்டணி குறித்த தெளிவான பார்வை கிடைக்கும்.

பாஜகவுக்கு எதிரான கட்சிகள்

கேள்வி: பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் எப்படி உங்கள் அணியில் இணைவர்?

பதில்: 1999ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும், 2001ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலிலும் எப்படி பா.ஜ.க. அங்கம் வகித்த, தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குச் சென்றன?

ராமதாஸ் விவகாரம்

கேள்வி: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான அதிகாரப் போட்டி குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: எல்லாம் நல்ல முறையில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன். மற்ற கட்சியின் உள்கட்சி விவகாரங்களில் நான் தலையிட மாட்டேன்.

விஜயை வலிய அழைத்த எடப்பாடி

இவ்வாறாக எடப்பாடி பழனிசாமி பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளார். விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கு தவெக போக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. அதிமுக பெரிய கட்சி, முதல்வர் பதவியை யாருக்கும் விட்டுக் கொடுக்காது. எனவே விஜய்யை, எடப்பாடி பழனிசாமி அழைத்தால் இருவரில் யாராவது ஒருவர் முதல்வர் பதவியை தியாகம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+