எங்க ஏரியா உள்ளே வராத..ஆம்மாடி எத்தனை? லொள் லொள் தொல்லையால் பயணிகள் ஷாக்..! சென்னை ஏர்போர்ட் அவலம்
சென்னை: இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகிறது. ஏரியா பிரச்சனை காரணமாக குரைத்துக் கொண்டு சண்டை போடும் நாய்களால் விமான பயணிகள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடுமையான பாதுகாப்பை தாண்டி இவ்வளவு நாய்கள் ஏர்போர்ட்டுக்குள் வந்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
தமிழகத்தின் தலைநகரில் அமைந்திருக்கும் சென்னை விமான நிலையம் ஒரு உள்நாட்டு மற்றும் 2 வெளிநாட்டு முனையங்கள் என மொத்தம் 3 முனையங்களுடன் செயல்பட்டு வருகிறது.

தற்போதைய சூழலில் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக மிகவும் பிசியாக செயல்படும் விமான நிலையங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் சென்னை விமான நிலையம் இருக்கிறது.
குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளுக்கு பிரதான தலைமையகமாக சென்னை விமான நிலையம் இருக்கிறது. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வெளிநாடுகளில் இருந்தும் இங்கு வருகை தருகின்றனர். அது மட்டும் அல்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இங்கிருந்து நூற்றுக்கணக்கான விமானங்கள் தினமும் இயக்கப்படுகிறது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த சென்னை விமான நிலையம் தற்போது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக இருப்பதாக அச்சம் எழுந்திருக்கிறது. ஏற்கனவே விமான நிலையத்தில் மேற்கூரையிலிருந்து கண்ணாடிகள் உடைந்து விழுந்து பயணிகளின் தலையை பதம் பார்த்த சம்பவங்கள் ஏராளமாக நடந்திருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட முறை மேற்கூரை உடைந்து விழுந்ததால் அதனை பயணிகள் ஒரு பொருட்டாகவே கருத முடியாத நிலை நீடிக்கிறது.
இந்நிலையில் யில் சென்னை விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிவது பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இது மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாகவே சென்னை விமான நிலையத்தின் பல பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. பிரதான வரவேற்பு நுழைவாயில், காத்திருக்கும் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நாய்கள் குவிந்து வருகின்றன.
இதனால் உள்நாட்டு பயணிகளும் வெளிநாட்டு பயணிகளும் அச்சத்துடனே விமான நிலையத்தில் இருக்கும் நிலை இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நாய்கள் தொல்லை அதிகரித்தது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து மாநகராட்சி மூலம் அந்த நாய்கள் பிடிபட்டன. இந்த நிலையில் திடீரென சென்னை விமான நிலையத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தற்போதைய சூழலில் 20க்கும் மேற்பட்ட நாய்கள் விமான நிலையத்தின் பல பகுதிகளில் சுற்றி வருகிறது.
மேலும் ’ஏரியா பிரச்சனை’ தொடர்பாக நாய்கள் திடீரென சண்டை போட்டுக்கொண்டு இருப்பதால் பயணிகள் அச்சத்தில் உறைந்து இருக்கின்றனர். நேற்று நுழைவாயில் பகுதியில் திடீரென பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சண்டை போட்டு குறைத்தவாறு அங்கும் இங்கும் ஓடின. இதனால் பயணிகள் கடும் அச்சமடைந்தனர். மேலும் சில பயணிகள் இந்த காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் அது வேகமாக பரவி வருகிறது.
ஏற்கனவே சென்னையில் பல்வேறு பகுதிகளில் மாடுகள் மற்றும் நாய்கள் தாக்கி பொதுமக்கள் காயமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது விமான நிலையத்திலும் நாய்கள் தொல்லை அதிகரித்து இருப்பது மக்களையும் பயணிகளையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. எனவே விமான நிலைய நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications