பெப்சி ரேட்டைவிட மொபைல் ரீசார்ஜ் கம்மின்னு சொன்ன ஏர்டெல் நிறுவனர்.. லாபம் பார்ப்பதோ பல ஆயிரம் கோடி
டெல்லி: இந்தியாவில் மீண்டும் செல்போன் ரீசார்ஜ் கட்டண உயர்வு குறித்த விவாதம் எழத்தொடங்கியுள்ளது. 65 கோடி வாடிக்கையாளர்களுடன் பாரதி ஏர்டெல் நிறுவனம் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் சோப்பு, சிப்ஸ், பெப்சி ஆகியவற்றை விட ரீசார்ஜ் கட்டணம் குறைவாக உள்ளது என்றும் இதனால் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் பாரதி மிட்டல் கூறியுள்ளார்.
பாரதி ஏர்டெல் நிறுவனம் இரண்டாம் காலாண்டுக்கான (ஜூலை - செப்டம்பர் 2026) நிதிநிலையை வெளியிட்டுள்ளது. இதில் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய், நிகர லாபம் தொடர்ச்சியாக வளர்ச்சி பாதையில் பயணிப்பது தெரியவந்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.60,877.50 கோடியாக உள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 3.99 சதவீதம் அதிகம். இதுவே கடந்த நிதியாண்டுக்கான, இரண்டாம் காலண்டுடன் ஒப்பிட்டால் 16.75 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரீசார்ஜ் கட்டணம் உயர்த்த வேண்டும்
ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.10,710.40 கோடியாக உள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 6.98 சதவீதம் அதிகம். கடந்த நிதியாண்டுக்கான, இரண்டாம் காலண்டுடன் ஒப்பிட்டால் 23.81 சதவீதம் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் ரூ.34,765.70 கோடியாக உள்ளது. லாப வரம்பு 57 சதவீதமாக இருக்கிறது. அவர்களின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.15,428 கோடியாக உள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 12.02 சதவீதமும், கடந்தாண்டை விட 25.20 சதவீதமும் அதிகமாகும்.
இதுகுறித்து பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனர் சுனில் பாரதி மிட்டல் கூறுகையில், இந்தியாவில் செல்போன் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெப்சி, சிப்ஸ் ஆகியவற்றை விட ரீசார்ஜ் கட்டணம் குறைவாக உள்ளது. மாதம் ஒரு பயனாளருக்கு ரூ.350 வீதம் ரீசார்ஜ் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். தினசரி ரூ.10 முதல் 12 வரை மட்டுமே செலவாகும். தொலை தொடர்பு நெட்வொர்க் பராமரிப்பு கட்டணம் அதிகரித்துவிட்டது.
சிப்ஸ் பெப்ஸியை விட குறைவு
மின்சாரம், எரிபொருள், சம்பளம் என நிர்வாக செலவு பன்மடங்கு உயர்ந்துவிட்டது. ரீசார்ஜ் கட்டண உயர்வு அவசியமானது. 10 வருடங்களுக்கு முன்பிருந்த இலக்கை வைத்து இப்போது ஓட முடியாது. காலம் மாறிவிட்டது. இந்தியாவில் தொலை தொடர்பு நெட்வொர்க் உள்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சீனாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் உள்ளன. இந்தியாவில் 3.5 லட்சம் டவர்களே உள்ளன.
இப்போதிருக்கும் கட்டமைப்பை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும். ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகிறது. ள் கணக்கை பார்த்தால், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப், பாக்கெட் சிப்ஸ், ஒரு பாட்டில் பெப்ஸியை விட ரீசார்ஜ் விலை குறைவு. பேங்கிங், யுபிஐ, கல்வி, மருத்துவம் தொடர்பாக செல்போனிலேயே எல்லாம் செய்ய முடியும். இன்ஸ்டாகிராம், யுடியுப் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளது. கடைசியாக 2024 ஆம் ஆண்டு ரீசார்ஜ் கட்டணம் உயர்ந்ததை கருத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications
