நான் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி.. வெளியே சொல்லிராதீங்க.. கணவரிடம் ஈஸ்வரியின் தில்லாலங்கடி நாடகம்
சென்னை: நான் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி. அவர் என் பெயரில் சோழிங்கநல்லூரில் பங்களா வாங்கியுள்ளார், இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என கணவர் அங்கமுத்துவிடம் ஒரு நாடகத்தை ஈஸ்வரி அரங்கேற்றியுள்ளார்.
அண்மைக்காலமாக பணக்காரர்களின் வீடுகளில் சில பணியாளர்கள் செய்யும் குற்றச்சம்பவங்களால் நல்ல மனம் படைத்த பணியாளர்களை கூட சந்தேகப்பட வைக்கிறது. அந்தளவுக்கு பணம், நகைக்காக எந்த எல்லைக்கும் செல்ல சிலர் துணிந்துவிட்டனர்.
அப்படித்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் செயல்பட்ட பணிப்பெண் ஈஸ்வரி செய்த சம்பவம் பகீர் கிளப்புகிறது. பொதுவாக பணக்காரர்களின் வீடுகளில் நல்ல சம்பளம் கொடுத்து, அவர்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு உதவியும் செய்வதுண்டு.

ஐஸ்வர்யா ரஜினி
நிச்சயமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பணிப்பெண் ஈஸ்வரிக்கு மாதம் ரூ 30 ஆயிரம் ஊதியம் கொடுத்துள்ளார். அவர் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கும் உதவி இருப்பார். ஆனாலும் அதிக பணத்தாசையால் ஈஸ்வரி இன்று சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். கடந்த 18 ஆண்டுகளாக சேர்த்து வைத்து லாக்கரில் வைத்த நகைகளில் 60 பவுனை காணவில்லை என ஐஸ்வர்யா ரஜினி புகார் அளித்துள்ளார்.

தேனாம்பேட்டை
அதன்படி தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பணிப்பெண் ஈஸ்வரி கடந்த 6 மாதங்களாக வேலையிலிருந்து நின்றுவிட்டார். எனவே அவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஐஸ்வர்யா வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும் தான் சிறுக சிறுக பணத்தை திருடியதாக ஒப்புக் கொண்டார்.

110 சவரன் நகைகள்
மேலும் அவருடைய வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியதில் ரூ 1 கோடி மதிப்பிலான சொத்து பத்திரத்தை மீட்டனர். மேலும் 110 சவரன் நகைகள், 40 கிராம் வைரம், 5 கிலோ வெள்ளிப் பொருட்களையும் மீட்டனர். இதுகுறித்து விசாரித்த போது சோழிங்கநல்லூரில் ரூ 1 கோடியில் ஈஸ்வரி வீடு வாங்கியுள்ளார்.

உடந்தை
தனது திருட்டுக்கு உடந்தையாக இருந்த டிரைவர் வெங்கடேசனுக்கு இதுவரை ரூ 9 லட்சம் வரை கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை மீட்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஈஸ்வரி கணவர் அங்கமுத்து பெயரில் வங்கிக் கணக்கில் அடகு வைத்துள்ள 350 கிராம் தங்க நகைகளை மீட்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈஸ்வரியின் கணவருக்கும் பங்கு இருக்கலாம் என கருதி போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

ஈஸ்வரியின் கில்லாடித்தனம்
ஆனால் ஈஸ்வரியின் கில்லாடித்தனம் எதுவுமே அவருடைய கணவருக்கு தெரியாத வகையில் அவர் பார்த்துக் கொண்டுள்ளார். ஈஸ்வரி தனது கணவர் அங்கமுத்துவிடம் சோழிங்கநல்லூர் என் பெயரில் வாங்கிய வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு சொந்தமானது. நான் அவருடைய பினாமி. இது வெளி உலகத்தை பொருத்தவரை இது நம் வீடு. ஆனால் உண்மையில் இது ஐஸ்வர்யா ரஜினியின் வீடு. இதை வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம். அப்படி சொன்னால் ஐஸ்வர்யா மேடமிற்கு பிரச்சினை வரும். என் வேலையும் பறிபோகும் என பெரிய நாடகத்தை அரங்கேற்றி வீட்டில் இவர் மீது சந்தேகமே ஏற்படாத அளவிற்கு ஈஸ்வரி நடந்துள்ளார். ஈஸ்வரியின் தில்லாலங்கடித்தனத்தை கேட்டு ஒரு கணம் போலீஸாரே அதிர்ச்சி அடைந்தனர். ஐஸ்வர்யா புகார் கொடுத்ததை விட இவரது வீட்டில் இருந்து 110 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டதால் அதெல்லாம் எப்படி கிடைத்தது, யாருடையது, அவையும் திருடியதா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications