பாகுபலி ஸ்டைலில் அஜித்! அடுத்து ஒரு பான் இண்டியா மூவி: விஷ்ணுவர்த்தன் குட் நியூஸ்
சென்னை: மும்பையில் உள்ள வீட்டை தமிழில் படம் எடுக்கவேண்டும் என்ற விருப்பத்திற்காக விற்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பிவிட்டேன் என்று இயக்குநர் விஷ்ணுவர்த்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் விஷ்ணுவர்த்தன். இவரது படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் அஜித்தை வைத்து இயக்கிய 'பில்லா' பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது. அதன்பின்னர் இவர் இயக்கிய 'சர்வம்' சரியாகப் போகவில்லை. அடுத்து வெளியான இரண்டு படங்கள் கூட வசூல் ரீதியாகப் பேசப்படவில்லை.

சொல்லப்போனால் சில வருடங்களாக இவர் சீனிலேயே இல்லை. தமிழ் சினிமாவை விட்டு விலகி மும்பை பக்கம் போய் தங்கிவிட்டார். இப்போது மீண்டும் 'நேசிப்பாயா' மூலம் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் 2 மாதங்கள் முன்பாக வெளியானது. கிட்டத்தட்ட 1.6 மில்லியன் வீயூவ்ஸ் பார்வையாளர்களை அது சென்று சேர்ந்துள்ளது. ஒரு மாதம் முன்பாக ஒரு பாடல் ஒன்றும் வெளியானது. அது யூடியூபில் 3.6 மில்லியன் வீயூவ்ஸ் சென்றுள்ளது. இந்நிலையில் விஷ்ணுவர்த்தன் தன் கடந்த கால சினிமா வாழ்க்கை பற்றியும் 'நேசிப்பாயா' பற்றியும் நிறைய விசயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், "என்னால் 'பில்லா' மாதிரி ஒரு படத்தை எடுப்பது ரொம்ப சுலபம். அந்தக் காரணத்தால்தான் அந்தப் படத்தைத் தெலுங்கில் ரீமேக் கூட நான் செய்யவில்லை. அதற்கான வாய்ப்புகள் வந்தும் மறுத்தேன். என்னால் பாதுகாப்பாக ஒரு பணிச் சூழல் அமைந்துவிட்டது என்பதற்காக அதையே செய்ய முடியாது. அதை உடைக்க விரும்புகிறேன். அதனால் அடுத்து என்ன செய்யப் போகிறாய்? என்ற கேள்வி மனதிலிருந்து கொண்டே இருக்கிறது.
சினிமா என்பது அதன் திரைக்கதையில்தான் இருக்கிறது. அதை நாம் புதுசு புதுசாக எழுதி மாற்றி அமைக்கவேண்டும். அப்போதுதான் நமக்கே நம் வேலையைப் பிடிக்கும். அப்படித்தான் 'சர்வம்' எடுத்தேன். அதற்குக் கலவையான விமர்சனம் வந்தது. அது சரியாகப் போகவில்லை என்பதால், பழியைப் பிறர் மீது போடமாட்டேன். அதற்கும் நான் தான் பொறுப்பு. எனக்கு ஒரு மாற்றம் தேவை இருந்தது. அதைச் செய்தேன். ஆனால், ஒர்க் அவுட் ஆகவில்லை.
பாலிவுட், தெலுங்கு எனப் போனேன். அங்கே எனக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. மும்பையில் வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆனேன். அப்படி இருந்தும் எனக்குப் பிறந்து வளர்ந்த நம்ம ஊரில் படம் பண்ணவேண்டும் எனத் தோன்றியது. மும்பை வீட்டை விற்றுவிட்டு, சென்னைக்கு வந்துவிட்டேன். சென்னை வந்து மீண்டும் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். படத்திற்குக் கதை எழுதினேன். அந்தக் கதைக்குச் சரியான தலைப்பு கிடைக்கவே இல்லை. ஒருநாள் சும்மா உட்கார்ந்து பேசும்போது 'நேசிப்பாயா' என ஒருவர் சொன்னார். உடனே அது மனதிற்கும் கதைக்கும் பொருந்தும் எனத் தோன்றியது.

என் படங்களில் யுவன் இசைக்கு முக்கியமான இடம் இருக்கிறது. இப்போது என்னால் அடித்துச் சொல்ல முடியும். யுவனைப் போல வேறு யாரும் இல்லை. அவருக்கு இணை அவர்தான். 'நேசிப்பாயா' படத்தின் கதையை எழுதும் போது 3 பாடல்கள்தான் இருந்தன. பிறகு யோசித்துப் பார்க்கும் போது யுவன் இசைக்காகவே 2 பாடல்களை மீண்டும் சேர்த்தேன்.
சில வருடங்கள் முன்னால் அஜித்தை வைத்து பொன்னியின் செல்வன் மாதிரி ஒரு வரலாற்றுக் கதையை விஷ்ணுவர்த்தன் இயக்க உள்ளதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால், அதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக யாரும் அறிவிக்கவில்லை. அந்தத் தகவல் உண்மையா? அதைப் பற்றிப் பேசிய விஷ்ணு, "அந்தச் செய்தி 100% உண்மைதான். பாலகுமாரன் அதற்கான கதையை எழுதுவதாக இருந்தது. அவரும் கதையை எழுதிக் கொண்டிருந்தார். அந்தக் கதையை அஜித்தை வைத்து எடுக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், அஜித் வேறு படங்களில் பிசியாகிவிட்டார். எனக்கு ஒரு இடைவெளி தேவைப்பட்டது. இப்போதுகூட அதே கதையை ஒரு நண்பரிடம் காபி ஷாப்பில் மிக உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவரும் அதைக் கேட்டு ஆர்வமாகிவிட்டார்.
பாலகுமாரன் அந்தக் கதையை எப்போதோ எழுதிக் கொடுத்திருந்தார். அவரும் இறந்தே போய்விட்டார். இத்தனை ஆண்டுகள் கழித்துக்கூட, அந்தக் கதையை உற்சாகமாக ஒருவரிடம் என்னால் சொல்ல முடிந்துள்ளது. அதுவே அதன் பலம். கட்டாயம் அந்தக் கதையைப் படமாக எடுப்பேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications