அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு பணி.. கோரிக்கை வைத்த மறுநாளே.. பணி ஆணை வழங்கிய தமிழக அரசு
சென்னை: திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதற்கான பணி நியமன ஆணையை இன்று வழங்கினார் அமைச்சர் பெரியகருப்பன். நேற்று முதல்வரிடம் அஜித்குமாரின் சகோதரர் நவீன் கோரிக்கை வைத்த நிலையில் மறுநாளே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் மரண வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் தான் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம் செய்தனர். தொடர்ந்து நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதன் அடிப்படையில் 5 போலீசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிபிஐக்கு மாற்றம்
நேற்று மதுரை உயர் நீதிமன்ற கிளை விசாரணை சரியாக நடக்குமா என்ற ஐயம் எழுப்பிய உடன் கோர்ட்டிலேயே அஜித் குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற ஆட்சேபனை கிடையாது என்று தமிழக அரசு வாதம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வைத்துள்ளது. மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தமிழக அரசு அதிகாரபூர்வ நிலைப்பாடு எடுத்துள்ளது. சிபிஐக்கு மாற்ற ஆட்சேபனை கிடையாது என என்ஓசி தாக்கல் செய்ய கோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னிப்பு கேட்ட முதல்வர்
அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் பாதிக்கப்பட்ட அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அஜித் குமார் தாய் மற்றும் சகோதரர் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதுதொடர்பாக அஜித் குமார் தாய் பேசுகையில், என் பையனுக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் கொலை செய்துவிட்டார்கள். ரொம்ப கஷ்டப்பட்டு 28 ஆண்டுகள் வளர்த்து பறிகொடுத்துவிட்டோம். இதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு ஸ்டாலின், ரொம்ப வருத்தமா இருக்கு.. மன்னித்துவிடுங்கள்.. மனதை தேற்றிக் கொள்ளுங்க.. கவலையாக இருக்கு.. தப்பு நடந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்ததாக கூறினார்.
அரசு பணி கோரிக்கை நிறைவேற்றம்
திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான பணி நியமன ஆணையை இன்று வழங்கினார் அமைச்சர் பெரியகருப்பன். நேற்று முதல்வரிடம் அஜித்குமாரின் சகோதரர் நவீன் கோரிக்கை வைத்த நிலையில் மறுநாளே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும் அரசு
அதோடு இந்த வழக்கு விசாரணை தொடர்பாக அரசு விரைவில் அறிக்கையும் தாக்கல் செய்ய உள்ளது. சிவகங்கை அருகே திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நீதி விசாரணை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அஜித் குமார் கொலை வழக்கை உணர்வுப் பூர்வமாக எடுத்து, சிபிசிஐடியின் சிறப்புக் குழு நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும். காரணமான உயரதிகாரிகள் முதல் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஜித் குமார் உடலின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது. உடலில் ஒரு பாகத்தையும் விடாமல் தாக்கப்பட்டுள்ளார். பதவி ஆணவத்தில் காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அஜித் குமார் இறக்கும் வரை, அவர் எதற்காக விசாரிக்கப்பட்டார் என்பதற்கு FIR பதிவு செய்யப்படவில்லை என்று கூறிய நீதிபதிகள், முதற்கட்ட இடைக்கால அறிக்கையை ஜூலை 8ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications