சிவகங்கை லாக் அப் மரணம்: அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரண நிதி
சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் நகை திருட்டு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் மாநிலத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை அமைச்சப் பெரியகருப்பணன் அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பகுதியில் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை திருட்டுப் போனது தொடர்பாக, அக்கோயிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்தை (வயது 28) விசாரணைக்காக திருப்புவனம் காவல்நிலையம் அழைத்து சென்றனர். அவரும் இதுதொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று காவல்துறையிடம் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, காவல்துறையின் ஸ்பெஷல் டீம் அஜித்தை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் விசாரணையின் போது அஜித்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணையை தொடங்கிய காவல் துறையினர், 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 5 போலீஸார் அதிரடியாக கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை அஜித்குமார் குடும்பத்தினரிடம் அமைச்சர் பெரியகருப்பன் அளித்தார். ஏற்கனவே மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் சார்பில் ரூ.7.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications