நெத்தியடி.. "கூட்டம் கூட்டுவது பெருமையா?”.. நடிகர் அஜித் குமார் கருத்தை கொண்டாடும் நெட்டிசன்கள்!
சென்னை: கூட்ட நெரிசல் பலி சம்பவம் குறித்து நடிகர் அஜித் குமார் கூறியுள்ள கருத்து சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது. "கூட்டம் கூட்டுவது பெருமை என்கிற அதீத மனநிலை கொண்ட சமூகமாக இன்று நாம் மாறியிருக்கிறோம். இது முடிவுக்கு வரவேண்டும்" என அஜித் கூறியுள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பரப்புரைக் கூட்டம் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என காவல்துறை தரப்பிலும், காவல்துறை முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை, காவல்துறையின் அறிவுறுத்தல் படியே நாங்கள் செயல்பட்டோம் என்று தவெக தரப்பும் மாறிமாறி குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
கரூர் கூட்ட நெரிசல் பலி குறித்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ரூ. 20 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரத்திற்கு அழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிலையில் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள நடிகர் அஜித் குமார், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அஜித் குமார் பேசுகையில், "கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு அந்த தனி நபரை மட்டுமே காரணமாக சொல்ல முடியாது. எல்லோரும் அதற்கு பொறுப்பு. கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்கு கூட்டமாக செல்கிறார்கள். அங்கு நெரிசல் ஏற்படுவதில்லை. ஏன் தியேட்டர்களிலும், சினிமா பிரபலங்களின் நிகழ்ச்சியிலும் ஏற்படுகிறது?
ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி நாம் யார் என்பதை காட்டக்கூடிய சமுதாயமாக மாறிவிட்டோம். இது முடிவுக்கு வர வேண்டும். அதனால் என்ன ஏற்படுகிறது என்றால், ஒட்டுமொத்த திரைத்துறையும் மோசமாக சித்தரிக்கப்படுகிறது. நாங்கள் அதை விரும்பவில்லை. ரசிகர்களின் அன்பை விரும்புகிறோம். அதற்காகத்தான் கடினமாக உழைக்கிறோம். ரசிகர்கள் அன்பை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளன.
ஊடகத்திற்கு இதில் பெரும் பங்கு இருக்கிறது. கூட்டத்தை கூட்டுவதில் தான் பெருமை இருக்கிறது என்று நினைக்கிறார்கள். ஊடகத்தில் இந்த நடிகர் அந்த நடிகரை விட அதிக ஓபனிங் கொடுத்துள்ளார் என்று கூறும்போது, அடுத்தமுறை நாம் இன்னும் நிரூபிக்க வேண்டும் என ரசிகர்கள் எடுத்துக்கொள்வார்கள், இவை அனைத்தும் நிறுத்தப்படவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
கூட்ட நெரிசல் குறித்து நடிகர் அஜித் குமார் கூறியுள்ள கருத்து சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது. "தல தல தான்".. "மக்கள் மீது அன்பு கொண்டவரின் உண்மையான கருத்து" என நெட்டிசன்கள் இதனை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications