“செம சேஃப்டி”! உயிரிழப்பை தடுக்க மின்வாரிய ஊழியர்களுக்கு சூப்பர் கருவி.. வாட்ச் போல அணிந்தால் போதும்
சென்னை: மின் வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் எனப் பல்வேறு இடங்களில் மின்சார கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதில் மின் வாரிய ஊழியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. உயிரை பணயம் வைத்து மின் வாரிய ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

குறிப்பாக வீடுகள் கம்பங்கள் ட்ரான்ஸ்பார்மர்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மின் வாரிய ஊழியர்கள் நேரில் செல்வார்கள். அவர்கள் மின்கம்பங்களில் ஏறி மின் ஒயர்களை பழுது பார்ப்பார்கள். சில நேரம் மின்சாரம் பாய்ந்து அவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
போதிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் இருத்தல், தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் பணிகளை மேற்கொள்ளுதல், முறையான கண்காணிப்பு இல்லாதது, கவனக்குறைவு போன்ற காரணங்களால் மின் வாரிய ஊழியர்கள் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.
மின்சாரம் பாய்கிறதா என முறையாக சோதிக்க வேண்டும், போதிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. எனினும், பாதுகாப்பு உபகரணங்கள் பெரும்பாலான நேரங்களில் மின் வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மின் வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை தலைக் கவசத்திலோ, கையிலோ அணிந்து கொண்டு மின் கம்பங்களில் ஏறும்போது, மின்சாரம் பாய்ந்தால் அது எச்சரிக்கை ஒலி எழுப்பி அலர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் பாயும் கம்பத்தில் தவறுதலாக ஏறிவிட்டால் அந்த இயந்திரம் எச்சரிக்கை ஒலி எழுப்பும். அளவுக்கு அதிகமாக வோல்டேஜ் வந்தால் சிவப்பு நிற லைட்டும் பீப் சவுண்டும் எழுப்பி அலர்ட் செய்யும். இதன் மூலம் விபத்துகள் குறைக்கப்படும்.

சேலம் மாவட்டத்தில் மின் வாரிய ஊழியர்களுக்கு இந்த எச்சரிக்கை கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன. மின் வாரியத்தில் பணியாற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேங் மேன்களுக்கு இந்தக் கருவி வழங்கப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் 450 கேங் மேன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மின் கம்பத்தில் ஏறும்போது, இந்தக் கருவி ஒலி எழுப்பினால் உடனடியாக கீழே இறங்கி, மின்சாரம் நிறுத்தப்படவில்லை என்றால் நிறுத்தி பரிசோதித்து விட்டு மின் கம்பத்தில் ஏற வேண்டும் என மின் வாரிய அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக வழங்கப்பட்டுள்ள இந்தக் கருவியை பணியில் இருக்கும்போது அணியாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின் வாரியம் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications