மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அனைத்து பேருந்துகளும் இயங்கும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
சென்னை: நாளை அனைத்து பேருந்துகளும் இயங்கும். மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், பிப்.25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

இதனால், பேருந்துகள் நாளை வழக்கம் போல் ஓடுமா என்ற ஐயம் மக்களிடையே உள்ளது. இதற்கிடையே, நாளை அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தில் போக்குவரத்துக்கு ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது. மேலும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் தொழிலாளர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.
பணிஓய்வு, வாரஓய்வு, மாற்றுப்பணி ஓய்வுக்கு அனுமதி பெற்றவர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. மாற்று ஓய்வு பின்னர் அறிவிக்கப்படும். நாளை விடுப்பு அனுமதி பெற்றவர்களுக்கும் விடுப்பு அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நாளை அனைத்து பேருந்துகளும் இயங்கும் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "போக்குவரத்து தொழிலாளர்களுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை முடியும் வரை போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.13 கோடி செலவாகும். நாளை அனைத்து பேருந்துகளும் இயங்கும். மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஊழியர்களுக்கும் விரைவில் ஓய்வு கால பயன்கள் வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கையை ஏற்று போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications