நீட் போராட்டம்! மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து.. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
சென்னை: நீட் போராட்டத்தில் பங்கேற்றிருந்த மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்திருக்கிறார்.
முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் உத்தரவின் பேரில் வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தனது x பக்கத்தில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி” என பதிவிட்டிருக்கிறார்.
நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து மத்திய கல்வியமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில், கரப்பான் ஜனதா கட்சியின் தலைமையில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். கடந்த 20ம் தேதி இந்த மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். அவர்கள் மீது டெல்லி காவல்துறை கடுமையான அடக்குமுறையை பயன்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்தும், மாணவர்களின் போராடத்திற்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்களில் மாணவர்களும் இளைஞர்களும் இறங்கினர்.
தவெக தலைமையிலான அரசு நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக சொல்லிக்கொண்டாலும், போராடும் மாணவர்களை தேடி தேடி கைது செய்தது. கல்வி நிலையத்திற்குள் நுழைந்து மாணவர் சங்க தலைவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். இதனால் டென்ஷன் ஆன காவல்துறை உண்மையில் முதல்வர் விஜய்யின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? என்று கேள்விகளை எழுப்பினர்.
போராடுவதற்கு இடம் இருக்கிறது.. ரோட்டில் போராடினால் கைதுதான் செய்வோம் என்று கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் சொல்ல.. போராட அனுமதி கேட்டால் ஏன் கொடுக்காமல் மறுக்கிறீர்கள் என்று கூட்டணி கட்சிகள் திரும்பி கேள்வி எழுப்ப.. ஒருவழியாக காவல்துறையும் அனுமதி அளத்தது. இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக மோடி அறிவித்துவிட்ட பின்னரும்.. விஜய் ஏன் தமிழகத்தில் மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுக்கிறார்? என்று கேள்வி எழுந்திருந்தது. இதையடுத்து வழக்குகள் கைவிடப்படுவதாக தற்போது அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருக்கிறார். இது மாணவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications
