இன்னும் செஞ்சுட்டு இருக்கோம்.. "கூண்டில் ஏற்ற போறேன்".. அவையில் ஸ்டாலின் உறுதிமொழி.. அதிரும் அதிமுக
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று அவையில் காட்டமாக பேசினார்.
2018ம் ஆண்டு நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொலை செய்யப்பட்டனர். நீதிபதி அருணா ஜெகதீசன் சார்பாக இது தொடர்பாக கடந்த 3 வருடங்களாக தீவிரமான விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையில் பல்வேறு அதிகாரிகள், போலீசார் விசாரணை செய்யப்பட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையில் ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹ 10 லட்சமும் வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஸ்டாலின் பேச்சு
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை பற்றி சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அது தொடர்பாக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமாக குறிப்பிட்டார். ஒழுங்கு நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்ட பின் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரு ஆட்சி நிர்வாகம் இரக்கமற்று எப்படி நடக்க கூடாது என்பதற்கு உதாரணம்தான் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு. மிக மோசமாக நடந்து கொண்டு உள்ளனர்.

அறிக்கை
நிர்வாகத்தை நடத்த கூடிய அதிகாரிகளாக இருந்தாலும், சட்ட ஒழுங்கை காக்க கூடிய போலீஸாக இருந்தாலும் மனிதாபிமானம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் வேறு மாதிரி நடந்து கொள்ள கூடாது. அது மனித தன்மைக்கே எதிரானது. அதிகாரமும், சட்டமும் மக்களை காக்கவே. அனைவரும் இதை காக்க வேண்டும். அதை மறக்க கூடாது.

உறுதிமொழி
நான் இப்போது ஒரு உறுதி மொழி சொல்கிறேன். இப்போது சொல்லும் உறுதிமொழி அல்ல அது. சட்டசபை தேர்தலுக்கு முன்பே நான் சொன்ன உறுதிமொழி அது, தவறு செய்தவர்கள் எல்லோரும் தண்டிக்கப்படுவார்கள். யார் யார் குற்றவாளிகளோ அவர்கள் எல்லாம் கண்டிப்பாக கூண்டில் ஏற்றப்படுவார்கள். தண்டிக்கப்படுவார்கள். அதைதான் இந்த உரையில் தெரிவித்துக்கொள்கிறேன். அருணா ஜெகதீசன் அறிக்கையை ஆய்வு செய்தோம்.

கூண்டில் ஏற்றுவேன்
இன்னும் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். குற்றவாளிகளை கண்டிப்பாக தண்டிப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார், முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் நேரடியாக ஈடுபட்ட 4 போலீசார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அதோடு முன்னாள் ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள், போலீசார் மீது துறைசார் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஸ்டாலினின் இந்த உறுதிமொழி அதிமுக தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications