ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. முழுமையான முடிவுகள் எப்போது வெளியாகும்.. A to Z தகவல்கள்
சென்னை: தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது, இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகு சில ஆண்டுகள் வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமலேயே இருந்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பிற்குப் பிறகு, 2019இல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்
இந்தச் சூழலில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு - காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்த்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

வாக்குப்பதிவு எவ்வளவு
முதல்கட்டமாக அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 74.37% வாக்குகள் பதிவாகியிருந்தது. 2ஆம் கட்டமாக அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 78.47% வாக்குகள் பதிவாகியிருந்தது. அதேபோல இதர மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 70.51% வாக்குகள் பதிவானது. வாக்கு பெட்டிகள் அனைத்தும் மாநிலம் முழுவதும் உள்ள 74 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் பணிகள்
வாக்கு பெட்டிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 74 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் வாக்கு எண்ணும் பணிகளில் மொத்தம் 31,245 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.

பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இரும்பு தடுப்புகளுடன் கூடிய மேஜைகளும் போடப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் வேட்பாளர், முகவர் தவிரப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

எப்படி நடைபெறும்
இந்தத் தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை வாக்குச் சீட்டும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்குப் பச்சை நிற வாக்குச் சீட்டும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச் சீட்டும் பயன்படுத்தப்பட்டன. காலை 8 மணிக்கு முதலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போது, முதலில் நிற அடிப்படையில் வாக்குச் சீட்டுகள் பிரிக்கும் பணி நடைபெறும். அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இதற்காக அதிகபட்சமாக 40 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன.

எங்கே அறிந்து கொள்ளலாம்
வாக்கு எண்ணிக்கை முடிவினை உடனுக்குடன் tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். வாக்கு எண்ணும் மையங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 6,228 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications