சூடுபிடித்த தொகுதிப் பங்கீடு.. CPI, CPIM, KMDK ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது திமுக!
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுடன் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நாளை (பிப்ரவரி 28) நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை, ஆளுங்கட்சியான திமுக கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முதல் நடத்தி வருகிறது. இதுவரை முஸ்லிம் லீக், மதிமுக, மமக ஆகிய கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கொமதேக ஆகிய கட்சிகளுடன் திமுக இன்று (பிப்.27) பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் நாளை நடைபெறவுள்ளது. நாளை (பிப்ரவரி 29) சென்னை அறிவாலயத்தில் இந்த முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில், இரு கட்சிகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் கலந்துகொண்டு தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவெடுக்க உள்ளனர்.
2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை கூட்டணியில், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் புதிதாக இடம்பெற்றுள்ளதால், காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகளை கோரி வருவதாகவும், அதை திமுக ஏற்குமா என்பதும் இப்போது முக்கிய கேள்வியாக உள்ளது. திமுக தரப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டசபை தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications