எச் ராஜாவிடம் மன்னிப்பு கேட்ட கோபி - சுதாகர்.. ‛பரிதாபங்கள்’ மீதான புகாரை வாபஸ் பெறும் தமிழக பாஜக
சென்னை: திருப்பதி லட்டு தொடர்பாக வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ‛பரிதாபங்கள்' யூடியூப் சேனலை சேர்ந்த கோபி, சுதாகர் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் எச் ராஜாவை தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரியுள்ளனர். இதனால் தமிழக பாஜக சார்பில் அவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட புகார் திரும்ப பெற அமர்பிரசாத் ரெட்டி முடிவு செய்துள்ளார்.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றி எண்ணெய் கலந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் தான் ‛பரிதாபங்கள்' யூடியூப் சேனலில் கடந்த 24ம் தேதி கோபி, சுதாகர் சார்பில் ‛லட்டு பாவங்கள்' என்ற பெயரில் வீடியோ வெளியிடப்பட்டது.

இந்த வீடியோ மொத்தம் 15.02 நிமிடங்கள் இருந்தன. வீடியோவில் திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பும், பன்றி கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை கிண்டலித்து ட்ரோல் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணையும் கிண்டல் செய்திருந்தனர்.
இந்த வீடியோவில் சுதாகர் அசைவ உணவை சாப்பிடாதவர்கள் போலவும், கோபி அசைவ உணவு சாப்பிடுவது போலவும் நடித்து இருந்தார். மேலும் லட்டுவில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றி கொழுப்பு கலந்து இருக்கிறது. இதனால் தான் லட்டு மிகவும் டேஸ்ட்டாக இருக்கிறது என கோபி சொல்லும் காட்சிகள் இருந்தது. அதேபோல் இன்னொரு சீனில் திருப்பதி மலை மீது அசைவ உணவு எடுத்து செல்ல விடாமல் தடுப்பவர்களிடம் இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்? என கேள்வி கேட்கும் வகையிலான காட்சிகள் இருக்கும். இதுதவிர ஆந்திர துணை முதல்வர் ‛பவர் ஸ்டார்' பவன் கல்யாணையும் கலாய்த்து இருந்தனர்.
இந்த வீடியோ சர்ச்சையானதால் அதனை ‛பரிதாபங்கள்' யூடியூப்பில் இருந்து டெலிட் செய்தனர். அதுமட்டுமின்றி, ‛பரிதாபங்கள்' சேனலின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மணம் புண்பட்டிருப்பதால் அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கி உள்ளோம். இதுபோல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்து கொள்கின்றோம்'' என கூறியிருந்தனர்.
இருப்பினும் கூட அவர்களின் வீடியோவை டெலிட் செய்வதற்கு முன்பே சிலர் டவுன்லோட் செய்து அதனை பரப்பி வருகின்றனர். இதையடுத்து தமிழக பாஜக சார்பில் நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி சார்பில் ஆந்திர டிஜிபியிடம் கோபி - சுதாகரின் ‛பரிதாபங்கள்' யூடியூப் சேனலுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச் ராஜா ஒப்புதலுடன் அளிக்கப்பட்டது. அதில் இந்துக்களின் உணர்வுகளை அவமதிப்பது மட்டுமல்லாமல் இரு சமூகங்களுக்கு இடையே பகையைப் பரப்பவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைத் தூண்டும் வகையிலும் வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தான் தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்பாளர் கோபி, சுதாகர் ஆகியோர் தங்களின் வீடியோவுக்கு வருத்தம் தெரிவித்து தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் எச் ராஜாவிடம் மன்னிப்பு கோரியதால் அவர்களுக்கு எதிரான புகார் வாபஸ் பெற அமர்பிரசாத் ரெட்டி முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். அதில், ‛‛கடவுள் வெங்கடேஸ்வரா சுவாமியின் பிரசாதமான லட்டு குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச் ராஜாவை தொடர்பு கொண்டு பேசி மன்னிப்பு கேட்டுள்ளனர். இதனால் ‛பரிதாபங்கள்' சேனல் மீதான புகாரை வாபஸ் பெற முடிவு செய்துள்ளேன். அதேவேளையில் எனது கடைசி மூச்சு இருக்கும் வரை சனாதன தர்மத்துக்காக தொடர்ந்து போராடுவேன்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications