வீடு வீடாக வரப்போறாங்க.. பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்கள் ரெடி.. எப்போனு பாருங்க.. சபாஷ் தமிழக அரசு
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் குறித்த அறிவிப்பு ஒன்றினை கூட்டுறவுத்துறை வெளியிட்டிருக்கிறது.. அத்துடன் மாவட்ட அளவில் கரும்பு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய, மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், சென்னையில் மண்டல கூடுதல் பதிவாளர் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பலத்த பாதுகாப்பு: அதன்படி ஜனவரி 9ம் தேதி முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது. முதல் நாளில் முற்பகல் 100 பேருக்கும் பிற்பகலில் 100 பேருக்கும் டோக்கன் வழங்கவும், இரண்டாம் நாள் முதல் முற்பகல் 200 பேருக்கும் பிற்பகலில் 200 பேருக்கும் டோக்கன் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் கடைகளில் போலீசார் பாதுகாப்பு போடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல, சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன் ஜனவரி 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் விநியோகம் செய்ய டோக்கன் அச்சடிக்கும் பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.
டோக்கன்கள்: ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படும். பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் டோக்கனில் இடம்பெற்றிருக்கும். தினமும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பெறும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று கூட்டுறவு துறை அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அனைத்து மண்டல இணை பதிவாளர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தைப்பொங்கல்: "2025 தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டு, ரூ.249.75 கோடி ஒதுக்கியுள்ளது.
பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது தொடர்பாக அரசாணைகளில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பரிசு தொகுப்புகள் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும். பரிசு தொகுப்பு விநியோக அட்டவணை விவரத்தை காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து, ரேஷன் கடைகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். எந்தவித புகாருக்கும் இடமின்றி பரிசு தொகுப்பை விநியோகம் செய்ய வேண்டும்.
கரும்பு கொள்முதல்: மாவட்ட அளவில் கரும்பு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய, மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், சென்னையில் மண்டல கூடுதல் பதிவாளர் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications