விண்ணப்பித்தோருக்கு குஷி.. "சாதி சான்றிதழை சரி பார்க்க இணையம்".. திருவண்ணாமலை கேஸில் ஹைகோர்ட் அதிரடி
சென்னை: ஜாதி சான்றிதழ் கேட்டு ஹைகோர்ட்டுக்கு சென்றுள்ளார் திருவண்ணாமலை மகாலட்சுமி.. அப்போது இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் முக்கிய உத்தரவினை பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
கடந்த 6ம் தேதி, தூத்துக்குடியை சேர்ந்த மல்லிகா என்பவர், மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.. அதில், ''நானும் என்னுடைய கணவரும் காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்தவர்கள்... எங்களுக்கு 5 குழந்தைகள் இருக்கிறார்கள்.. அவர்களின் கல்வி தேவைக்காக சாதி சான்றிதழ் வழங்க கோரி திருச்செந்தூர் வருவாய் மண்டல அலுவலரிடம் விண்ணப்பித்தோம்.

வேலைவாய்ப்பு: ஆனால், எங்களின் சமூகத்தை உறுதி செய்வதற்காக ரத்த வழி உறவுகளின் சாதிச் சான்றிதழை வழங்குமாறு அவர் கூறியிருந்தார். அதனடிப்படையில் என்னுடைய உறவினரின் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டதே தவிர, நான் கோரியிருந்த சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், குழந்தைகளின் கல்விக்கான சலுகை வேலை வாய்ப்பு போன்றவை பாதிக்கப்படுகிறது.
எனவே, எனது குழந்தைகளுக்கு இந்து காட்டு நாயக்கன் என்ற பிரிவின் கீழ் சாதி சான்றிதழை வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
நெறிமுறைகள்: இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, "சுப்ரீம்கோர்ட் மாதிரி பட்டீல் வழக்கில், அந்தந்த மாநிலங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.. ஆனால், தமிழகத்தில் 30 வருடங்களாகியும்கூட, இது உருவாக்கப்படவில்லை.
ஆகவே, தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறை செயலரை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் சேர்க்கிறது... அவர் சுப்ரீம் கோர்ட்டில் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அதன் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு இந்த வழக்கையும் தற்போது ஒத்திவைத்திருக்கிறார்கள்.
காட்டுநாயக்கன்: இப்படிப்பட்ட சூழலில், திருவண்ணாமலையை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.. இவரும் "காட்டுநாயக்கன்" என்ற பழங்குடியின பிரிவை சேர்ந்தவர்.. இவரும் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருக்கிறார்.. அப்போது தன்னுடைய தந்தை, சகோதரி ஆகியோர் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில், அதே ஜாதி சான்றிதழ் பெற்றதற்கான ஆதாரங்களையும் மகாலட்சுமி சமர்ப்பித்துள்ளார்.
ஆனாலும், மகாலட்சுமி கோரிய, ஜாதி சான்றிதழ் வழங்க, வருவாய் கோட்ட அதிகாரி மறுத்துள்ளதாக தெரிகிறது.. எனவே, உயர் நீதிமன்றத்தில் மகாலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கானது, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
ஜாதி சான்றிதழ்: "கல்வி மற்றும் வேலைவாய்ப்பை, விளிம்பு நிலை சமூகத்தினர் அணுகவும், அவர்களின் முன்னேற்றத்துக்காகவும், ஜாதி சான்றிதழ் தேவை. இந்த வழக்கை பொறுத்தவரை, மனுதாரரின் தந்தையும், சகோதரியும், காட்டுநாயக்கன் ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளனர். எனவே, மனுதாரரின் வழக்கு நியாயமானதாகவே தோன்றுகிறது.
மேல்முறையீட்டை ஒரு வருடத்துக்கு பிறகு கலெக்டர் நிராகரித்திருக்கிறார்.. ராணிப்பேட்டை மாவட்ட அதிகாரியை அணுகும்படி உத்தரவிட்டிருக்கிறார்.. இதுபோன்ற விண்ணப்பங்களை சரிபார்த்து, ஜாதி சான்றிதழ் வழங்க, மத்திய அளவில் ஆன்லைன் தளத்தை ஏற்படுத்த வேண்டும்... ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கவும், அவற்றை சரிபார்த்து வழங்கவும், பொது இணையத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
இணையதளம்: சொந்த மாவட்டத்தில் விண்ணப்பிக்கும்படி சொல்லாமல், தான் வசிக்கும் மாவட்டத்திலுள்ள அதிகாரியிடம் விண்ணப்பிக்க ஏதுவாக, இந்த இணையதள வசதியை விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
விண்ணப்பித்தவரின் ஜாதியை சரிபார்க்கும் விதமாக, வேறு மாவட்டத்தில் அவரது பெற்றோர் வசித்தாலும், அதையும் சரிபார்க்கும் வசதியும் இணையத்தில் அமைந்திருத்தல் வேண்டும்.
ஜாதி சான்றிதழ் சரிபார்த்து வழங்கும் நடைமுறைக்கு, கால அட்டவணை நிர்ணயிக்க வேண்டும்.. அப்போது தான் தேவையின்றி தாமதம் ஏற்படாது. இந்த பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து, அரசிடம் கருத்து பெற்று தெரிவிக்க, அரசு பிளீடர் அவகாசம் கோரியிருப்பதால், இதன் விசாரணை வரும் 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வரவேற்பு: ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கவும், அவற்றை சரிபார்த்து வழங்கவும், பொது இணையத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டால், அனைத்து பிரிவு மக்களுக்குமே உபயோகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications