அமீருக்காக படை திரண்டு ஞானவேலை கும்மி எடுக்கும் 'சுப்பிரமணியபுரம் கேங்'கில் இணைந்த இயக்குநர் சேரன்!
சென்னை: இயக்குநர் அமீர் குறித்து திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் முன்வைத்த விமர்சனத்துக்குரிய வகையில் பேசிய பேட்டிக்கு அடுத்தடுத்த கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த பட்டியலில் இயக்குநர் சேரனும் இணைந்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் அமீர்.. இயக்குநர் பாலாவின் நண்பரின் தம்பி. பாலாவுடன் பயணித்து பின்னர் தனக்கே உரிய பாணியில் தனித்துவமான தரமான தமிழ் சினிமாக்களை தந்து வருகிறவர். இன்று 25-வது படத்தில் நடிப்பதை கொண்டாடுகிற கார்த்திக் என்ற ஒரு நடிகரை பருத்திவீரனில் செதுக்கிய சிற்பி என்பது மிகையல்ல.. கார்த்திக் அண்ணன் சூர்யாவையும் நடிப்புத் துறையில் செதுக்கியவர் அமீர் என்பதும் முகஸ்துதி அல்ல. யதார்த்தம்.

மதுரை உள்ளிட்ட 'தெக்கத்தி' சீமையில் இருந்து வந்து 'வம்பாடு' பட்டு சென்னை மண்ணில் உருண்டு புரண்டு தங்களை நிலைநிறுத்திக் கொண்ட எத்தனையோ ஜாம்பவான்கள் திரையுலகில் இருக்கின்றனர். இந்தப் பட்டியலில் சேரன், பாலா, அமீர், சசிகுமார், சமுத்திரகனி என பலரும் 'சுப்பிரமணியபுரம்' கேங் போல வாழும் சாட்சிகளாக நிற்கின்றனர்.
பருத்திவீரனில் தாம் பட்ட 'பாட்டை' அமீர் பக்கம் பக்கமாக எழுதும் அளவுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். பருத்திவீரன் 'பஞ்சாயத்தால்' சுப்பிரமணியபுரம் தருவதற்கு சசிகுமார் போராடிய பெருங்கதையை காப்பியம் போல பேட்டி கொடுத்திருக்கிறார் அமீர். பருத்திவீரன் பெருவெற்றிப் படமாக கொண்டாடப்பட்டாலும் அமீர் இன்னமும் இந்த படத்தில் தமக்கு கிடைக்க வேண்டிய நியாயத்துக்காக நீதிமன்றப் படிகளேறிக் கொண்டிருக்கிறார்.
இவை எல்லாம் அரசல் புரசலாக கேட்கப்பட்டோ அல்லது கேட்கப்படாமலோ திரை உலகில் உலவியவையாக இருந்தன. இன்று இவை அத்தனையையும் பொதுவெளியில் சமூக வலைதளங்களில் பேசப்பட வேண்டிய 'சம்பவங்களாக' செய்ய வைத்திருக்கிறார் ஞானவேல் என்பது புகாரல்ல. உண்மைதான். ஒரு படைப்பாளியை திருடன், திருட்டு கணக்கு எழுதுகிறவன் என்றெல்லாம் அவதூறுகளை மனம் போன போக்கில் ஞானவேல் கொட்டி விட்டு சென்றதற்காக அமீரின் அகமும் புறமும் அறிந்த, அமீருடன் பயணித்த அத்தனை சகாக்களும் குறிப்பாக 'தெக்கத்தி பசங்க' எனும் மதுரை பிரதர்ஸ் அத்தனை பேரும் "பட்டாபெட்டி தெரிய வேட்டியை" மடித்துக் கட்டிக் கொண்டு களமிறங்கிவிட்டனர்.
அதுவும் ஞானவேல் வருத்தம் தெரிவிக்கிறேன் என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கைக்கு பரமனும் கனகுவும் (சசிகுமார், சமுத்திரகனி) கை கோர்த்து கும்மியோ கும்மி என 'கொத்து' போட்டுவிட்டனர். இவர்களில் இறுதியாக இணைந்திருப்பது சேரன்.
"அமீர்..
மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு....
காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே.. திமிராய் இரு.. நீயின்றி அவர்களில்லை என்ற கர்வம் மட்டும் போதும் .. உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும். @StudioGreen2
#Gnanavelraja படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள்
அமீரின் நேர்மையையும், உண்மையும், நாணயமும் நான் நன்கறிந்தவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது. கண்டிக்கிறேன் உங்களை. கார்த்தியும் சூர்யாவும் உங்களை இந்நேரம் உம் தவறை கண்டித்திருக்கவேண்டும்" - இவ்வாறு சேரன் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
