ஆம்ஸ்ட்ராங் படுகொலை! பா.ரஞ்சித்தின் கருத்துக்கு எதிர் கருத்து கூறிய இயக்குநர் அமீர்!
சென்னை: கள்ளச்சாராய மரணம், ஆம்ஸ்ட்ராங் கொலை ஆகியவை தடுக்கப்பட்டிருக்க வேண்டியவை. ஆனால் அதற்காக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற யோலோ படத்தின் தொடக்க விழாவில் அமீர் கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் போதை வஸ்துக்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஏதோ தமிழகத்தில் மட்டும்தான் போதை பொருட்கள் புழக்கம் உள்ளது என கூற முடியாது.

அப்படி கூறினால் அது ஒரு வகையான அரசியல். இந்திய அளவில் வடமாநிலங்களில் குறிப்பாக குஜராத் போன்ற துறைமுகங்களில் டன் கணக்கில் இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் உள்ளதை மறுக்க முடியாது.
கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்துள்ளனர். அது போல் பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார், இவையெல்லாம் தடுக்கப்பட்டிருக்க வேண்டியவை. அதில் மாற்றமில்லை. ஆனால் அதற்காக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என சொல்லிவிட முடியாது.
கள்ளச்சாராய மரணம், ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்டவைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இல்லை என்றால் நாம் விமர்சிக்கலாம். பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை என சொல்வது ஓர் அரசியல்தான். ஆம்ஸ்ட்ராங் முக்கிய தலைவர், அவர் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். காவல் துறை அதிகாரிகளை மாற்றியதை நான் விமர்சிக்க முடியாது.
அதை அரசின் சரியான நடவடிக்கையாகத்தான் பார்க்கிறேன். அரசியல் காரணங்களுக்காக சிலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது நடந்திருக்கக் கூடாது என்பதுதான் எனது எண்ணம். கள்ளச்சாராய மரணத்தில் உடனடியாக ரூ 10 லட்சம் அறிவிக்கப்பட்டதில் எனக்கும் உடன்பாடில்லை, தாய், தகப்பனை இழந்த குழந்தைகளை அரசு தன் வசப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ 10 லட்சம் என்பது ஏற்புடையதல்ல.
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை அரசியல் தலைவர்கள் நேரில் சென்று பார்த்ததெல்லாம் சரியான அரசியலாக எனக்குத் தோன்றவில்லை. கள்ளச்சாராய மரணங்களை அரசு மட்டும்தான் தடுக்கும் என நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியது. எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தடுக்க வேண்டிய பொறுப்பும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமையும் உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. இவ்வாறு அமீர் தெரிவித்திருந்தார்.
ஆம்ஸ்ட்ராங் மரணம் குறித்து அமீர் கூறியிருப்பது இயக்குநர் பா.ரஞ்சித்தின் கருத்துக்கு எதிராக இருப்பதாகவே கருதப்படுகிறது. 6 கேள்விகளை எழுப்பி பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்கப் போகிறீர்கள்?
சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை பா.ரஞ்சித் எழுப்பியிருந்தார்.












Click it and Unblock the Notifications