1.99%.. தமிழகத்தில் வேகமெடுத்த கொரோனா.. பாயிண்டை சுட்டிக்காட்டி மத்திய அரசு எச்சரிக்கை.. அட்வைஸ்!
தமிழ்நாட்டில் கொரோனா உறுதி செய்யும் தன்மை 1.99 சதவீதமாக உள்ளது. இது இந்தியாவில் கொரோனா சராசரி தொற்று விகிதத்தை ஒப்பிடும்போது 0.61 சதவீதம் அதிகமாகும்.
சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு அவசரமாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியாகும் சராசரி சதவீதத்தை விட தமிழ்நாட்டில் பரவல் என்பது அதிகரித்துள்ளது என எச்சரிக்கை செய்து பல்வேறு அட்வைஸ்களை வழங்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தற்போது பல மாநிலங்களில் கொரோனா பரவல் என்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் சில வாரமாக குறிப்பிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் என்பது மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டிலும் கூட கொரோனா பரவல் என்பது உயர்ந்து வருகிறது.

சுகாதாரத்துறை கடிதம்
இந்நிலையில் தான் தமிழ்நாடு அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவசரமாக கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் தமிழ்நாட்டுக்கு கொரோனா தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு எழுதப்பட்டு கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் அதிகரிப்பு
கடந்த 8ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவில் 2,082 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 15ம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் 3,264 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 8 ம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் 170 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை என்பது கடந்த 15ம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் 258 ஆக அதிகரித்துள்ளது.

5 அம்ச தடுப்பு நடவடிக்கை
மேலும் கடந்த 15ம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் கொரோனா உறுதியாகும் சதவீதம் 1.99 என்ற அளவில் உள்ளது. இது இந்தியாவில் கொரோனா தொற்றை உறுதி செய்யும் விகிதத்தை விட 0.61 சதவீதம் அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 அம்ச தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டும். அதன்படி பரிசோதனை, நோயாளிகள் கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்டவற்றை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

வேறு 4 மாநிலங்களுக்கு கடிதம்
இதேபோல் கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத் மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications