ஏன்? சென்னையில் சில இடங்களில் தேங்கும் மழைநீர்.. அமைச்சர் கேஎன் நேரு விளக்கம்.. அதிரடி நடவடிக்கை
சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் தேங்கிய நீர் வேகமாக வடிந்துள்ளது. சில இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் போர்க்கால அடிப்படையில் மழையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக்கூறிய அமைச்சர் கேஎன் நேரு சில இடங்களில் மழைநீர் ஏன் தேங்கி உள்ளது என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கி இருந்தாலும் கூட பல இடங்களில் பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை தொடர்ந்து ஆங்காங்கே பெய்து வருகிறது. இதனால் டூவீலர்களில் வேலைக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

சென்னையில் கனமழை
சென்னை எழும்பூர், வேப்பேரி, பெரிமேடு, திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தியாகராய நகர், ஜி.என் செட்டி சாலை,மாம்பலம், கொளத்தூர் உள்பட பல இடங்களில் கனமழை நீடித்தது. சென்னையில் வழக்கமாக அக்டோபர் இறுதி முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழையில் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கும். ஆனால் நேற்றைய மழையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை. மழைநீர் வேகமாக வடிந்தது. சில இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அமைச்சர்கள் ஆய்வு
இந்நிலையில் தான் சென்னை ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு ஆய்வு செய்தார். அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோரும் உடனிருந்தனர். கட்டுப்பாட்டு அறைக்கு பொது மக்களிடம் இருந்து புகார்களையும் அதன் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் அமைச்சர்கள் மற்றும் மேயர் கேட்டறிந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை அமைச்சர் கேஎன் நேரு கூறியதாவது:

163 தங்குமிடங்கள்
சென்னை மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
ரிப்பன் மாளிகையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் எந்நேரமும் தொடர்புக் கொண்டு பாதிப்புகள் குறித்த புகார்களையும் உதவிகளை கோரலாம். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் தங்குவதற்கு ஏற்றார் போல் 163 தங்குமிடங்களும், உணவு, உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அவர்களுக்கு ஏற்படுத்தி தர தயாராக உள்ளது.

19,500 பணியாளர்கள்
மேலும், சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கள பணிகளை நேரில் ஒருங்கிணைத்து வருகின்றனர். மழைநீர் வடிகால் இல்லாத சில பகுதிகளில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ளது. இந்த பகுதிகளில் மோட்டார் கொண்டு மழைநீர் வெளியேற்றப்படுகிறது. மழை தொடங்கியது முதல் இரவு பகலாக சென்னை முழுவதும் 19,500 பணியாளர்கள் சீரமைப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்'' என்றார்.

அமைச்சர் சேகர்பாபு
அதன்பிறகு அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ‛‛2015 மழை வெள்ளத்திற்கு பிறகும் ஆட்சியில் இருந்தவர்கள் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தான் நிரந்தர தீர்வு காண பணிகள் நடைபெற்று வருகிறது . இதனால் தான் பல பகுதிகளில் இன்று மழைநீர் தேங்கவில்லை. மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications