நுழைவு வாயில்களுக்கு திடீர் பூட்டு! சென்னையில் போராடும் ஆசிரியர்கள் இரவில் கைது? பரபர டிபிஐ வளாகம்
சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று இரவு அனைத்து நுழைவுவாயில்களையும் போலீசார் பூட்டுப்போட்டு பூட்டினர். அமைச்சர் அன்பில் மகேஷ் பல அறிவிப்புகளை வெளியிட்டும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவுவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றன. இன்று 7 வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் 3 வகையான ஆசிரியர்கள் பங்கெடுத்துள்ளனர்.

அதாவது சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்களும், டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரி தகுதி தேர்வு தேர்ச்சி ஆசிரியர்களின் கூட்டமைப்பினரும் போராடி வருகின்றனர்.
இந்த போராட்டத்தால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சில ஆசிரியைகள் தங்களின் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றினால் தான் போராட்டம் கைவிடப்படும் என ஆசிரியர், ஆசிரியையகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், ஆசிரியர்கள் சங்கம், பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து கோரிக்கைகள் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிகையாளர் சந்தித்தார். அப்போது, ‛‛பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரூ.10,000 ஊதியம் பெற்று வரும் நிலையில், அவர்களுக்கு ரூ.2,500 உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு ரூ. 10 லட்சத்தில் மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும். தொழிற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்'' என கூறினார். ஆனால் இதனை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால் இன்று இரவும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் சென்னை டிபிஐ வளாகத்தில் அனைத்து நுழைவுவாயில்களுக்கும் இன்று இரவு போலீசார் திடீரென்று பூட்டுப்போட்டுள்ளனர். கடந்த 6 நாட்களாக பூட்டு போடப்படாமல் இருந்ததாக கூறப்படும் நிலையில் இன்று போலீசாரின் இந்த நடவடிக்கை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதோடு போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தகவல்கள் பரவுகிறது. இதனால் டிபிஐ வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications