மயிலாப்பூரில் வந்து நிற்கும் செல்வப்பெருந்தகை.. "அமித்ஷாவே திரும்பி போ" தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில், அவருக்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு காட்ட முடிவு செய்துள்ளது.. சென்னைக்கு வருகை தரவுள்ள அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் கருப்பு கொடி போராட்டம் நடத்தவுள்ளது. தமிழக நலன்களுக்கு விரோதமாக செயல்படுவதாக அமித்ஷா மீது காங்கிரஸ் குற்றம் சாட்டி, இந்த போராட்டத்தை இன்று நடத்த போகிறது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளநிலையில், கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

அண்ணாமலை சந்திப்பு
தொடர்ந்து டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமித்ஷா மற்றும் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியதாக தெரிகிறது. இதற்கிடையே மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.. இப்படிப்பட்ட சூழலில் அமித்ஷா இன்று சென்னை வருகிறார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "மத்திய உள்துறை அமைச்சர் நாளை (இன்று) மாலை வரை சென்னையில் இருக்கிறார்.. பாஜக மாநிலத்தலைவர் நிகழ்விற்கும், மத்திய மந்திரி அமித்ஷா வருகைக்கும் சம்பந்தமில்லை" என்று கூறியிருந்தார்.
தமிழக காங்கிரஸ்
இதனிடையே, அமித்ஷாவின் வருகைக்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"மத்திய பாஜக அரசின் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் இணைந்து தமிழக நலன்களுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் பாரபட்சம், மும்மொழி திட்டத்தை ஏற்கவில்லை என்றால் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கு நிதி வழங்க மறுப்பது, இந்தி மொழி மற்றும் நீட் தேர்வு திணிப்பு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகளின் மூலமாக இந்தியா கூட்டணி கட்சியினர் மீது வழக்குகள், சோதனைகள் மற்றும் அடக்குமுறைகள் என சர்வாதிகார, பாசிச முறையில் அமித்ஷா செயல்பட்டு வருகிறார்.
இன்று கருப்பு கொடி கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழங்கிய மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களை பாராளுமன்றத்தில் இழிவுபடுத்தி பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னைக்கு இன்று வருகை புரிய இருக்கிறார்.
அவருக்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக கண்டனத்தை தெரிவிக்கிற வகையில், எனது தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகில் (சிட்டி சென்டர் அருகில்) கருப்புக் கொடி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிற 'உள்துறை மந்திரி அமித்ஷாவே திரும்பிப் போ' என்ற கண்டனக் குரல் ஒலிக்கிற வகையில் ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications