அமித்ஷா திமுக (எ) அதிமுக.. பாஜகவிடம் பணிந்த எடப்பாடி பழனிசாமி! திமுகவை வீழ்த்த புதிய முடிவு: பிரபலம்
சென்னை: அதிமுக கூட்டணியிலுள்ள பாஜகவை, தமிழக மக்கள், ஒரு அரசியல் கட்சியாக ஏற்றுக் கொள்வதற்கு, பாஜக செய்த நன்மைகளின் பட்டியல் என்னென்ன? கூட்டணி வைக்க ஒரு லாஜிக் வேணும்ல? பாஜகவை முன்னிலைப்படுத்த, தமிழக நலன்களுக்கு பாஜக என்னென்ன செய்திருக்கிறது? என்று அதிமுகதான் சொல்ல வேண்டும் என்று ராஜகம்பீரன் கூறியிருக்கிறார். அத்துடன் அதிமுக-பாஜக கூட்டணி ஏன்? என்பது குறித்த சில காட்டமான கேள்விகளையும் நமக்கு தந்த ஸ்பெஷல் நேர்காணலில் எழுப்பியிருக்கிறார்.
நம்முடைய Oneindia Arasiyal யூடியூப் சேனலுக்கு மூத்த அரசியல் விமர்சகர் ராஜ கம்பீரன் பிரத்யேகமான பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், அதிமுக பாஜக கூட்டணி குறித்து தன்னுடைய கருத்துக்களை ஆழமாக வெளிப்படுத்தியுள்ளதுடன், ஆணித்தரமான சில கேள்விகளையும் எழுப்பியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

பங்காளிகளை கண்டுக்கல
"தன்னுடைய அரசியல் பயணத்தை எங்கிருந்து துவங்கினாரோ, எங்கே முதலமைச்சர் பயணத்தை துவங்கினாரோ, அதற்கு காரணமான சசிகலாவை, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என யாரையுமே ஏற்றுக் கொள்ளாதவர் எடப்பாடி பழனிசாமி. பங்காளிகளை ஏற்றுக் கொள்ளாத எடப்பாடி பழனிசாமி, பகையாளியான பாஜகவை ஏற்றுக் கொண்டுள்ளார்.
சமூக நலம்சார்ந்த, பொதுநலம் சார்ந்த எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல், கண்மூடித்தனமாக, யாருடைய ஆலோசனையையும் கேட்காமல், ரகசியமாக டெல்லிக்கு சென்று, ஒரு கூட்டணியை அமைத்துவிட்டார்.
செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி, மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து, அதற்கு பிறகு கூட்டணி அமைப்பதுதான் ஜனநாயகப்பூர்வமான நடவடிக்கையாகும். ஆனால், எடப்பாடி பழனிசாமி முடிவை முன்கூட்டியே தன்னிச்சையாக எடுத்துவிட்டார்.. இந்த முடிவை செயற்குழுவில் அனைவருமே ஏற்றுக் கொள்ளவில்லை.. கூட்டணி குறித்து யாரும விமர்சிக்காதீர்கள், இதுகுறித்து பேசிவிடாதீர்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம்?
இது ஒரு பொருந்தா கூட்டணி
பேசப்பட வேண்டிய அளவுக்கு செயற்குழு உறுப்பினர்களிடம் வருத்தம், கோபம், ஆதங்கம் உள்ளது என்றுதானே அர்த்தம்? யாரும் எதுவும் பேசிடாதீங்க என்று எடப்பாடி சொல்கிறார் என்றால், அந்த கூட்டணி "பொருந்தா கூட்டணி" என்பதற்கு இதுதான் சாட்சியே.
ஆனால், திமுகவை வீழ்த்துவது ஒன்றே தன்னுடைய குறிக்கோள் என்று சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி... திமுகவை எதற்காக வீழ்த்த வேண்டும் என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கு எதிராக அரசியல் செய்தவர்கள் நிலைநாட்டியிருக்கிறார்கள்..
ஆரம்ப காலத்தில் காங்கிரஸை திமுக வீழ்த்தியது. ஏனென்றால், இந்தி ஆதிக்கத்தை கொண்டு வந்து சேர்க்கிறார்கள், நம்முடைய தமிர் மொழியை அழிக்க பார்க்கிறார்கள் என்பதற்காக திமுக காங்கிரஸை வீழ்த்தியது.. இது திமுகவின் நியாயமான காரணம்தானே? ஆனால், "காங்கிரஸை வீழ்த்துவது எங்கள் லட்சியம்" என்று திமுக எப்போதும் சொல்லவில்லை. காங்கிரஸின் கோட்பாடு தவறாக உள்ளது, அதனால் வீழ்த்த துணிந்தது திமுக.
நியாயமான ஒரு காரணம் என்ன
அதேபோல போபர்ஸ் ஊழல் வருகிறபோது, அந்த ஊழலை மையமாக வைத்து, அக்கட்சியை வீழ்த்த வேண்டும் என்றார் விபி சிங்.. அதேபோல, வளர்ப்பு மகன் ஆடம்பர திருமணம் நடந்தபோது, "ஜெயலலிதாவுக்கு நிர்வாகம் தெரியவில்லை, உல்லாச வாழ்க்கை வாழ்கிறார், அவர் மக்களுக்காக சிந்திக்கவில்லை" என்பதை அம்பலப்படுத்தி, திமுக, அதிமுகவை அன்று வீழ்த்தியது. அதேபோல எம்ஜிஆர், கலைஞரை வீழ்த்த ஒரு காரணம் சொன்னார்.
இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒரு கட்சியை வீழ்த்த ஒரு வலுவான காரணம் பின்னணியில் இருந்திருக்கிறது.. ஆனால் திமுகவை வீழ்த்துவதற்கு எடப்பாடி பழனிசாமியிடம் ஏதாவது ஒரு காரணம் இருக்கிறதா?
எப்போது பார்த்தாலும் நீட் தேர்வை காரணம் காட்டுவார்கள்.. மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள நீட் தேர்வை, திமுகவால் ரத்து செய்ய முடியவில்லை, திமுக பொய் சொல்லிவிட்டது என்று அதிமுக குற்றஞ்சாட்டுகிறது. அப்படியானால், அதிமுக அந்த அதிகார மையத்துடன் தானே இன்று கூட்டணி வைக்கிறது? பேசாமல் நீங்களே நீட் தேரவை ரத்து செய்துவிட்டு, மக்களிடம் ஓட்டு கேட்கலாமே? திமுக சாதிக்க முடியாததை அதிமுக சாதித்துவிட்டது என்று மக்களும் உங்களுக்கு ஓட்டு போடுவாங்களே?
குறைபாடுகளுக்கு காரணமே பாஜக
திமுகவை குறைசொல்லிவிட்டு, திமுகவின் இந்த குறைபாடுகளுக்கு யார் காரணமாக இருக்கிறார்களோ, அவர்களுடனேயே கூட்டணி வைக்கிறது அதிமுக. தமிழர் விரோத போக்கை கொண்டுள்ள பாஜகவுடன் , அதிமுக கூட்டணி போவதன் மூலமாக, பாஜக மீதான தமிழர்களின் மீதான கோபம் தேவையில்லாமல் தாங்கி பிடிக்க கூடிய இடத்தில் அதிமுக வந்து சேர்கிறது. இது அதிமுகவுக்குதானே இழப்பு?
திமுக கூட்டணி - ஒரே நேர்க்கோட்டில்
திமுக கூட்டணிக்கும், மற்ற கூட்டணிக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது.. காங்கிரசுக்கு மதச்சார்பற்ற கோட்பாடுதான் கொள்கை.. அதே கொள்கை திமுகவுக்கும் உள்ளது.. மதவெறிக்கான அரசியல் என்ற கோட்பாடு இடதுசாரிகளுக்கு உள்ளது. எனவே தொழிலாளர்கள் நலனை முன்வைத்தும், மார்க்சீய முதலாளித்துவத்துக்கு எதிரான அரசியலை முன்வைத்தும் கருத்தியலை கொண்டிருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு என்ன கோட்பாடு உள்ளதோ, அதேபோன்ற மதச்சார்பற்ற வகுப்புவாத அரசியலுக்கு எதிரான போக்கு திமுகவுக்கும் உள்ளது. அப்படியானால் , பாஜகவை வேண்டாம் என்று சொல்கிற அனைவரும் ஒரே புள்ளியில் இணைவதற்கு கருத்தொற்றுமை உள்ளது.
இங்கு மக்கள் நலக் கூட்டணி பற்றி சொல்லியாக வேண்டும்.. அந்த கூட்டணி ஏன் அன்று வெற்றி பெறவில்லை? இத்தனைக்கும் அதில் இடதுசாரி இருந்தார்கள், விசிக இருந்தார்கள்.. அன்று வலிமையாக இருந்த தேமுதிக இருந்தார்கள்.. இவர்கள் எல்லாம் இருந்தும் ஏன் அக்கூட்டணி வெற்றி பெறவில்லை? காரணம் இவர்கள் திடீர்னு வந்து ஒரு கூட்டணியை அமைத்தார்கள்..
திடீர் மாப்பிள்ளை - திடீர் கூட்டணி
எப்போதுமே, நீண்ட காலம் பயணத்திட்டத்தில் இருந்து, மக்களின் நம்பகத்தன்மை பெற்று, அதற்கு பிறகு கூட்டணி வைத்தால் அது இயல்பான கூட்டணியாகும்.. ஆனால், இவர்கள் திடீர் மாப்பிள்ளை மாதிரி, திடீர் கூட்டணி என்றால் எப்படி மக்கள் நம்புவார்கள்?
அதுபோல, அதிமுக கூட்டணியிலுள்ள பாஜகவை, தமிழக மக்கள் இயல்பாக ஒரு அரசியல் கட்சியாக ஏற்றுக் கொள்வதற்கு, பாஜக செய்த நன்மைகளின் பட்டியல் என்னென்ன? ஒரு லாஜிக் வேணும்ல? பாஜகவை முன்னிலைப்படுத்த, தமிழக நலன்களுக்கு பாஜக என்னென்ன செய்திருக்கிறது? என்று அதிமுகதான் சொல்ல வேண்டும்..
அடமானம் திமுக
அதைவிட்டுவிட்டு, செய்யத் தவறியவைகளை வெறும் மைனஸ் விஷயங்களாகவே வைத்துக் கொண்டுள்ள பாஜகவுடன் எப்படி அதிமுக கூட்டணி போகிறது? அன்று ஏன் கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறினார்கள் என்பதற்கும் சரியான விளக்கம் இல்லை.. இப்போது ஏன் மறுபடியும் பாஜகவுடன் சேருகிறார்கள் என்பதற்கும் சரியான விளக்கம் இல்லை.. இந்த இரண்டு விளக்கங்களையும் நாமளாகவே புரிந்து கொள்ளவேண்டும் போல.
ஏற்கனவே ரெய்டுகளுக்கு பயந்துதான் ஆட்சியை அடமானம் வைத்தார்கள், இப்போது கட்சியையே கொண்டுபோய் பாஜகவிடம் அடமானம் வைத்திருக்கிறார்கள். அதிமுக என்றால் என்ன? அமித்ஷா திமுகவா? அடமானம் வைக்கப்பட்ட திமுகவா?" என்றெல்லாம் ராஜகம்பீரன் காரசாரமாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications