ஸ்கூட்டி தர அமித்ஷா வரலாம்; நாணயம் வெளியிட ராஜ்நாத் வரக் கூடாதா? லக்ஷ்மணன் லாஜிக் கேள்வி
சென்னை: கலைஞர் நாணய வெளியீட்டு விழாவுக்கு ராஜ்நாத்சிங்கை அழைத்தது தவறு என்றால், அன்றைக்கு ஏன் ஸ்கூட்டி வழங்கும் விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தினார் என்ற ஒரு கேள்வியை மூத்த பத்திரிகையாளர் லக்ஷ்மணன் எழுப்பி இருக்கிறார்.
பாஜக கூட்டணிக்கு திமுக தாவ இருப்பதாக பல ஊகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. மு.கருணாநிதியின் 100 ரூபாய் நாணய வெளியிட்டு விழாவுக்குப் பிறகு பாஜக மீது திமுக ஒரு மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளதாகவும் சிலர் பேசி வருகின்றனர். திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய கூட்டணி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டி வருகிறார். ஸ்டாலின் உண்மையில் பாஜகவுடன் சமரசத்திற்குத் தயாராகிவிட்டாரா? திமுக கூட்டணி 2026இல் உடைந்துவிடுமா? பாஜக பக்கம் போய்விடுமா திமுக? ஆகிய கேள்விகளுக்கு மூத்த பத்திரிகையாளர் எஸ் பி லக்ஷ்மணன் எடைபோட்டுப் பதிலளித்துள்ளார்.

அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “தேர்தல் ஆணையத்தின் விதிப்படி வருடத்திற்கு 2 முறை செயற்குழுவைக் கூட்ட வேண்டும். ஒருமுறை பொதுக்குழுவைக் கூட்டவேண்டும். அதன்படி 7 மாதங்களாக அதிமுக செயற்குழு கூடவில்லை. அதற்காகவே அவசரமாகக் கூடியது. அதில் எந்தவித விசேஷமும் இல்லை. ஒரு அங்கீகாரம் பெற்ற கட்சியாக அதைச் செய்யவேண்டி இருப்பதால் செய்துள்ளார்கள். அதில் பாஜக அரசைக் கண்டித்து போட்டுள்ளது வரவேற்க வேண்டியது. திமுக ஆட்சி நடந்தாலும் நிதி ஒதுக்காத மத்திய அரசை அதிமுக கண்டித்துள்ளது ஒரு நாகரிக அரசியலின் அடையாளம்.
அடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026 தேர்தலை எதிர்கொள்வோம் என்று தீர்மானம் போட்டுள்ளனர். இன்று எடப்பாடிதான் கட்சியின் தலைமையில் இருக்கிறார். ஆக, அப்படித் தானே தீர்மானம் போட முடியும்? கட்சியில் உள்ள 6 மூத்த தலைவர்கள் எடப்பாடியைச் சந்தித்து கட்சியின் தொடர் தோல்வியைப் பற்றி விவாதித்தார்களே ஒழிய, எடப்பாடி தலைமையை மாற்றிவிடுவோம் என்று சவால்விடவில்லை. ஓட்டுச் சதவீதம் அபாயகரமான அளவில் குறைந்துள்ளதை எடுத்துச் சொன்னார்கள்.
2026 மீண்டும் எடப்பாடியை முதல்வராக வேண்டும் என்றால், கட்சி ஒன்றிணைய வேண்டும் என்றுதான் யோசனை சொல்லப் போனார்கள். எடப்பாடி தன் கருத்தை முன்வைத்தார். அதை யாரும் எதிர்த்துப் பேசவில்லையே? சிவி சண்முகம்கூட, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் எந்தச் சலசலப்பையும் ஏற்படுத்தவில்லையே?
ஆனால், எடப்பாடி மீது கட்சித் தலைவர்களுக்கு ஆதங்கம் இருக்கிறது. அதை அவரே ஏற்றுக் கொண்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் ஒரு பூத் கமிட்டிக்கு 10 பேரை போட்டார்கள். அந்த 10 பேரில் ஒருவர்கூட வாக்களிக்கவில்லை என்பதை அவர் உணர்ந்துள்ளார். இந்த நிலையை மாற்ற வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் கட்சியைக் காப்பாற்ற முடியும்.
நான்கூட சசிகலா 90% ஒருங்கிணைப்பு பணி முடிந்துவிட்டது என சொன்னவுடன் ஏதோ மாற்றம் வரப்போகிறது என்று நினைத்தேன். அடுத்த நாளே எடப்பாடி 'நீங்கள் ஜானகியைப் போல பெருந்தன்மையாகக் கட்சியை விட்டுக் கொடுத்துவிட்டு விலகிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டார். இதுதான் 90% ஒருங்கிணைத்தற்கான அடையாளமா? யார் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் அதிமுக எடப்பாடி கையில்தான் உள்ளது. அவர் விட்டுக் கொடுக்காமல் எந்த மாற்றமும் வர சாத்தியமில்லை. அவர் மனம் வைத்தால்தான் உண்டு. அதைப் புரிந்துகொண்டு ஒருங்கிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதை எல்லாம் நடத்தாமல் கருணாநிதி நாணய வெளியிட்டு நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டதால், பாஜக மற்றும் திமுக ரகசிய கூட்டணி வெளியே வந்துவிட்டது என்று எடப்பாடி சொல்வது நாகரிக அரசியலா? இந்த நாணய நிகழ்ச்சி மத்திய அரசு செய்கிறது. அதனால்தான் அரசு அதிகாரிகள் நன்றியுரை வரவேற்புரை செய்தார்கள். கடந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சியின் போது திமுக ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தை புறக்கணித்தது. அதனைவிட இந்த ஆண்டுகளா புறக்கணிக்க வேண்டிய கட்டாயம் இருந்து.
ஆளுநர் பதவிக் காலம் முடிந்த பிறகும் எந்த அடிப்படையில் அவர் பதவியில் நீடிக்கிறார் என்று ஸ்டாலின் அறிக்கை விட்டிருக்க வேண்டும். இருந்தாலும் அவர் அமைதியாகத் தேநீர் விருந்தில் பங்கேற்றார். அதற்குக் காரணம், நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சி நல்லபடியாக நடக்க வேண்டும். அந்தவகையில் அவர் அப்படி நடந்துகொண்டது சரிதான். அவர் தங்கள் கட்சியின் தலைவருக்கு தேசிய அளவில் ஒரு மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக விட்டுக் கொடுத்து நடந்துள்ளார். அதில் என்ன தவறு?
எடப்பாடி ஆட்சியிலிருந்தபோது ஸ்கூட்டி கொடுப்பதற்காக அமித்ஷாவை அழைத்து வந்தார்களே ஏன்? அது மாநில அரசு திட்டம் தானே? அதற்கு ஏன் அமித்ஷா? சரி, கூட்டணியிலிருந்ததால் அழைத்தது தவறு ஒன்றும் இல்லை. ஆனால், நான்கு வருடத்திற்கு மேல் ஆட்சியிலிருந்த எடப்பாடி, தங்கள் கட்சியின் தலைவிக்கு மரியாதை அளிக்கும்படி ஒரு அஞ்சலிக் கூட்டத்தைக் கூட நடத்தவில்லையே ஏன்? அதைத் தவறவிட்டது யார்? எடப்பாடிதானே? மத்திய அமைச்சர்களை அதிமுக அழைத்திருந்தால் வந்திருப்பார்களே? ஏன் செய்யவில்லை? ஏன் நீங்கள் எம்.ஜிஆர். நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்தவில்லை?
ஒரு மகனாக தனது தந்தையின் நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்த வேண்டும் என ஸ்டாலின் கணக்குப் போட்டார். பாஜக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் திமுக கூட்டணியில் சின்ன சலசலப்பை ஏற்படுத்த முடியும் என்று கூட நினைத்திருக்கலாம். எல்லாம் இங்கே அரசியல்தான். எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் எடப்பாடி செய்யத் தவறியதை ஸ்டாலின் அவரது தந்தைக்குச் செய்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை இந்த நிகழ்ச்சி திமுகவுக்குச் சாதனைதான்.
கலைஞர் நாணயம் வெளியிட்டு விழாவை வாழ்த்தி ராகுல் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த ஸ்டாலின் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று கூறி இருக்கிறார். ஆகவே, இதுவரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக நீடிக்கிறது. அவர்கள் பாஜக பக்கம் போகவே மாட்டார்கள் என்று எந்த உத்தரவாதமும் தர முடியாது. ஏனென்றால் ஒரே இரவில் பாஜக பக்கம் போனவர்கள் தான் திமுகவினர் ” என்கிறார்.












Click it and Unblock the Notifications