செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி.. முதல்வர் வேட்பாளர் யார்? எடப்பாடி பழனிசாமி பெயரை தவிர்த்த அமித் ஷா!
சென்னை: தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுகவைச் சேர்ந்தவர் முதல்வராக இருப்பார் என்று தெரிவித்திருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை அமித்ஷா தவிர்த்துவிட்டு, அதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறி இருப்பது பல்வேறு விவாதங்களை தொடங்கி இருக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி, புதிய கூட்டணியுடன் களம் கண்டது. இதன்பின் பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்று அதிமுகவினர் கூறி வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திடீரென அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா இருவரும் கைகோர்த்து கூட்டணியை உறுதி செய்தனர்.

அதிமுக - பாஜக கூட்டணி
அந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறி வருகிறார். பாஜகவினரும் கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையில் இருந்து பின்வாங்கவில்லை. அதிலும் அண்ணாமலை கொஞ்சம் மேலே சென்று, பாஜக ஆட்சி என்று தெரிவித்தார். ஆனால் அதிமுக தரப்பிலோ, கூட்டணி ஆட்சி.. ஆனால் கூட்டணி அரசு அல்ல என்று விளக்கம் கொடுத்து வந்தனர்.
அமித்ஷா வைத்த வெடி
பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டாலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க அதிமுக முன் வரவில்லை. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையும். தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு கீழ் பாஜக இருப்பதால், அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக இருப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி பெயரை தவிர்த்த அமித்ஷா
சென்னை வந்த அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியுடன் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்து, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று விருந்து சாப்பிட்டார். எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கம் காட்டிய போதும், அவர் பெயரை அமித்ஷா தவிர்த்திருப்பது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
2ஆம் கட்ட தலைவர்கள்
ஏனென்றால் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான எஸ்பி வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பாஜகவுடன் அதிக நெருக்கம் காட்டி வருகின்றனர். எஸ்பி வேலுமணி கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு அமித்ஷாவை சந்தித்து வருகிறார். ஒருமுறை எடப்பாடி பழனிசாமிக்கு கூட கிடைக்காத நேரம் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் எஸ்பி வேலுமணி சந்தித்திருந்தார்.
பாஜகவுடன் நெருக்கம்
அதேபோல் செங்கோட்டையனும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு நடத்தி இருக்கிறார். இவர்கள் இருவருமே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவேளை சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து வென்று கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில், முதலமைச்சராக வேறு ஒருவரை கொண்டு வர பாஜக முயற்சிக்கிறதோ என்ற சந்தேம் எழுந்துள்ளது.
செங்கோட்டையன் vs எஸ்பி வேலுமணி
அதுமட்டுமல்லாமல் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்தே அதிமுகவின் 2ஆம் கட்ட தலைவர்களின் செயல்பாடுகளும் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. செங்கோட்டையன் அமைதியாக தேர்தல் பணிகளில் கவனித்து வரும் சூழலில், எஸ்பி வேலுமணி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதனால் வரும் நாட்களில் அதிமுகவில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications