கியர்அப் ஆகாத கூட்டணி.. எடப்பாடி மீது அதிருப்தியில் அமித்ஷா! அண்ணாமலையை அடிக்கடி சந்திப்பது இதற்காக?
சென்னை: தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக மட்டும் ஏற்கனவே வலுவான கூட்டணியை உறுதி செய்து, அடுத்த கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைப்பில் இன்னும் பல குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
குறிப்பாக அதிமுக-பாஜக கூட்டணியின் நிலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.இதற்கு காரணம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் எனவும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் திமுகவுக்கு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக, இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் அந்த கூட்டணியில் தற்போது பாஜக மற்றும் தமாக தவிர வேறு பெரிய கட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை.

அதிமுக பாஜக கூட்டணி
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தற்போது அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டனர். இதனால் அதிமுக கூட்டணி பலவீனமடைந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ம.நீ.ம. உள்ளிட்ட பல கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
அமித்ஷா அதிருப்தி
அந்த கூட்டணியை எதிர்கொள்வது அதிமுக-பாஜக கூட்டணிக்கு எளிதான விஷயமாக இல்லை. இதுதான் அமித்ஷாவுக்கு பெரும் கவலையாக மாறியுள்ளது. அதிமுகவுக்குள் நீடிக்கும் உட்கட்சி பிரச்சனைகள், கூட்டணியை மேலும் சிக்கலாக்கி வருகின்றன. அதேபோல், பாமக மற்றும் தேமுதிக போன்ற முக்கிய கூட்டணி கட்சிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படாததும் பிரச்சனையாக உள்ளது. இதன் காரணமாகவே, அமித்ஷாவின் தமிழக பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி பிடிவாதம்
தேமுதிக தரப்பில் அடுத்த ஆண்டு தங்களது கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டாலும், தற்போது அதிமுக பக்கம் அந்தக் கட்சி சாய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக தரப்பில் தேமுதிகக்கு 15 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில்தான் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, "அதிமுக மாநிலங்களவை பதவி தருவதாக கூறி எங்களை ஏமாற்றவில்லை; 2026ல் தருவதாக சொன்னார்கள்" என்று சமீபத்தில் பேசியிருந்தார். இதன் மூலம் தேமுதிக-அதிமுக நெருக்கம் வெளிப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
பாமக தேமுதிக கூட்டணி
மற்றொரு பக்கம், வட தமிழகத்தில் வலுவான வாக்கு வங்கியை வைத்துள்ள பாமக, தந்தை-மகன் இடையிலான கருத்து வேறுபாடுகளால் பெரும் குழப்பத்தில் சிக்கியுள்ளது. அன்புமணி ராமதாஸ் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், டாக்டர் ராமதாஸ் திமுக கூட்டணியில் இடம் பெற விருப்பம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உள்கட்சி மோதல் தொடர்ந்தால், பாமக தேர்தல் சின்னமே முடங்கும் அபாயம் உள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி
மேலும், கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வருவதும் அமித்ஷாவுக்கு பெரிய சவாலாக உள்ளது. எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் தினகரன், அவரை கூட்டணி தலைவராக ஏற்றுக்கொள்வாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கிடையே, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணி
இதனால், அந்த வாய்ப்பும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. இந்த அனைத்து காரணங்களாலும், தமிழ்நாட்டில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அமித்ஷாவின் இலக்கு எளிதாக நிறைவேறாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஓபிஎஸ் - டிடிவி இணைக்க மாட்டேன் என எடப்பாடி பிடிவாதமாக இருப்பது. கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகள் என்ற கருத்தும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் தான் அமித்ஷா அண்ணாமலை மூலம் ஓபிஎஸ், டிடிவி, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளிடம் பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications