டேபிளில் கிடந்த மொத்த ஜாதகம்.. லெஃப்ட் ரைட் வாங்கிய அமித்ஷா? பம்மிய பாஜக தலைகள்! இதுதான் காரணமா?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக தமிழக பாஜக தலைவர்களுடன் நேற்று பாஜக மூத்த தலைவர் அமித்ஷா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது தமிழ்நாட்டில் பாஜகவுக்குள் கோஷ்டி பூசல் அதிகரித்து வருவதைக் கண்டித்ததாகவும், போலியான பூத் கமிட்டி தொடர்பான அறிக்கையைக் காட்டி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக பாஜக அதனைத் தீவிரமாகக் கருத்தில் கொண்டு பணியாற்றி வருகிறது. கர்நாடகா வரை ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருக்கும் பாஜக, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கால் பதிக்கத் தீவிரமாகி வருகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது பெற வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். தற்போதைக்கு அது முடியாத நிலையில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மூன்றாவது பெரும் கட்சியாக வரவேண்டும் என நினைக்கிறது.

2026 தேர்தல்
இதற்காக அதிரடியாக தமிழக பாஜக தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த வகையில் இளம் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். சேர்ந்த உடனே அவருக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டதோடு தலைவர் பதவியும் அடுத்த சில மாதங்களில் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுகளால் அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.
பாஜக தலைவர்கள்
மக்களவைத் தேர்தலை அதிமுகவும் பாஜகவும் தனித்தனி அணியாகத் தேர்தலை சந்தித்த நிலையில் இரு கட்சிகளுமே படுதோல்வியைச் சந்தித்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தையும் ஒரு சில எம்எல்ஏக்களையும் பெற வேண்டும் என்பதற்காக அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதனால் தான் தேர்தலுக்கு ஒரு ஆண்டு இருக்கும்போதே அதிகாரப்பூர்வமாக கூட்டணியையும் அறிவித்தார் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா.
பாஜக கோஷ்டி
இந்த நிலையில் தமிழக பாஜக கட்சிக்குள் கோஷ்டி மோதல் இருப்பதாகவும் பல தலைவர்கள் தனி அணியாகச் செயல்படுவதாக டெல்லிக்குப் புகார்கள் பறந்தன. மேலும் அதிமுக தலைமையை அவமதிப்பது போல சில புகார்கள் டெல்லிக்குப் பறந்தன. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர்களை வரவழைத்த அமித்ஷா நேற்று அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதே நேரத்தில் பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை அதில் கலந்துகொள்ளவில்லை.
அமித்ஷா எச்சரிக்கை
நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன் உள்ளிட்டோர் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் அதிமுக கூட்டணியை விமர்சித்து பேசக்கூடாது, எந்த காரணத்தைக் கொண்டும் கூட்டணிக்குள் பிளவு வர தமிழக பாஜக தலைவர்கள் காரணமாக இருக்கக் கூடாது என சற்று கடுமையாகவே பேசினாராம் அமித்ஷா. அது மட்டுமல்லாமல் தமிழக பாஜகவில் கோஷ்டி மோதல் அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட தலைவர்கள் தங்களுக்கு என ஒரு குழுவை கட்சிக்குள் வைத்திருக்கிறார்கள்.
பாஜக உட்கட்சி அரசியல்
சமூக வலைதளங்களிலும் தங்கள் கட்சித் தலைவர்களையே காரசாரமாக விமர்சித்து வருவதையும் சுட்டிக்காட்டிய அமித்ஷா, எந்த காரணத்தைக் கொண்டும் தமிழக பாஜகவில் கோஷ்டி மோதல் இருக்கக் கூடாது, இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார் என சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் விட தலைமையை ஏமாற்றியதுதான் அமித்ஷாவின் கோபத்தை அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகள் தவிர்த்து, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் தொடங்கி கிளைக் கழகம் வரை போலியாக பல நிர்வாகிகளின் பெயரை முந்தைய நிர்வாகிகள் தலைமைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
போலி பூத் கமிட்டி
மேலும் பல மாவட்டங்களில் பூத் கமிட்டி அமைக்காமலேயே அமைத்ததாக கணக்கு காட்டி இருக்கிறார்கள். குறிப்பிட்ட சில தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு பேசியபோது தாங்கள் பிற கட்சிகளில் இருப்பதாக அந்த பூத் கமிட்டி ஏஜென்ட்கள் கூறியதால் தலைமை கடும் அதிர்ச்சி அடைந்ததாம். இது தொடர்பாகவும் கடும் அதிருப்தியை அமித்ஷா வெளிப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இன்னும் மூன்று மாதங்களுக்குள் அனைத்து வேலைகளையும் முடித்து ஜனவரி மாதத்தில் தேர்தலுக்குத் தயாராக வேண்டுமென ஸ்ட்ரிக்டாகவே உத்தரவு போட்டுள்ளார் அமித்ஷா என்கின்றனர்.












Click it and Unblock the Notifications